டி20 உலககோப்பை : இந்தியா சந்திக்கும் எதிரிகள் எப்படி ! பலம், பலவீனம்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ளது, இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.

Pakistan, Newzeland, Afghanistan
Photo Credits : Getty


அக்டோபர் 17ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி வரை நடைபெற்றன, இதில் இந்தியா இடம் வகிக்கும் சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவுக்கு குரூப் சுற்றுலிருந்து ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்தியாவின் எதிரிகள்:

இதை அடுத்து இந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரி பாகிஸ்தான், வலுவான நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளை இந்தியா சந்திக்க உள்ளது.

இந்தியாவின் சூப்பர் 12 போட்டிகள்:

அக்டோபர் 24, பாகிஸ்தான், துபாய்.

அக்டோபர் 31, நியூஸிலாந்து, துபாய்.

நவம்பர் 3, ஆப்கானிஸ்தான், அபுதாபி.

நவம்பர் 5, ஸ்காட்லாந்து, துபாய்.

நவம்பர் 8, நமீபியா, துபாய்.

  • இதில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக இந்தியா எளிதாக வெல்லும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

அப்படியானால் சூப்பர் 12 சுற்றில் இந்தியா சந்திக்க இருக்கும் வலுவான பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எப்படி உள்ளன. அந்த அணிகளின் நட்சத்திர வீரர்கள் யார், அந்த அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் போன்ற அம்சங்களை பார்ப்போம்:

1. பாகிஸ்தான்:

இந்தியா தனது முதல் போட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24ம் தேதி சந்திக்க உள்ளது, கடந்த பல வருடங்களாக இந்த உலக கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் அதிகப்படியான போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளது அந்த அணிக்கு இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய சாதகத்தை அளிக்க உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பலம் : அதிரடியான டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் சிறப்பான வேகவேகப்பந்து வீச்சு கூட்டணி அந்த அணிக்கு பலத்தை சேர்கிறது. டாப் ஆர்டரில் கேப்டன் பாபர் அசாம் உடன் பாக்கர் ஜமான், ஹைதர் அலி ஆகியோர் வலுசேர்க்க மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்கள் சோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் பந்துவீசும் ஆல்ரவுண்டர்களாக இருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.

பந்துவீச்சில் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், ஹசன் அலி போன்ற திறமையான அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியின் தூண்களாக உள்ளார்கள்.

பலவீனம் : இருப்பினும் இந்த உலகக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் ஆனால் பாகிஸ்தான் அணியில் இருக்கும் இமாத் வாசிம், சடாப் கான் போன்ற சுழல் பவுலர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பதில்லை.

மேலும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களது பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ததால் சமீபத்தில் பாகிஸ்தான் அணி எந்தவொரு முதல் தரமான கிரிக்கெட்டிலும் பங்கேற்க முடியாமல் இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் பயிற்சி எடுக்க முடியாமல் போயுள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

India Vs Pakistan
Photo : Getty Images


2. நியூஸிலாந்து :

இந்தியா தன் 2வது சூப்பர் 12 போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நட்சத்திர வீரர்கள் அடங்கிய நியூசிலாந்தை வரும் அக்டோபர் 31ஆம் தேதி எதிர்கொள்கிறது.

கடைசியாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது, அந்த வெற்றியைப் போலவே டி20 உலக கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பலம் : எந்தவித கடினமான தருணத்திலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை பெற்றுத் தரக்கூடிய கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் டேவோன் கான்வே, மார்ட்டின் கப்தில் என அந்த அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக காணப்படுகிறது.

ஜிம்மி நீசம், கையில் ஜமிசன், டார்ல் மிட்சேல் போன்ற பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களால் அந்த அணியின் மிடில் ஆர்டர் ஓரளவு சிறப்பாக உள்ளது.

பந்துவீச்சில் லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதீ என மேட்ச் வின்னர் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைந்துள்ளார்கள்.

பலவீனம் : இருப்பினும் பாகிஸ்தான் போலவே நியூசிலாந்து அணியிலும் மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை, அதேபோல் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் திடீரென ஏற்படும் மோசமான தருணத்தில் ரன்கள் சேர்க்கும் அளவுக்கு இல்லாமல் சற்று வலுவற்று இருக்கின்றது.

குறிப்பாக உலகக் கோப்பை போன்ற கடினமான போட்டிகளில் ஆரம்பத்தில் டாப் ஆர்டர் தவறிவிட்டால் கேன் வில்லியம்சன் தவிர இதர பேட்ஸ்மேன்கள் சவாலை சந்தித்து ரன்கள் குவிக்கும் அளவுக்கு இல்லை. அதைப்போல் பவுலிங்கில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் லேசாக சொதப்பினாலும் அது அந்த அணிக்கு ஆபத்தை கொடுக்கும்.

3. ஆப்கானிஸ்தான் :

முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை வரும் நவம்பர் 3ஆம் தேதி இந்தியா சந்திக்க உள்ளது.

பலம் : முகமது நபி, ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரகுமான் என 3 உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தை சேர்க்கிறார்கள் குறிப்பாக இந்த உலகக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவர்கள் நிச்சயமாக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என நம்பலாம்.

குறிப்பாக தனது மேஜிக்கால் எந்த ஒரு கடினமான தருணத்திலும் பேட்ஸ்மேன்களை திண்டாட செய்யக்கூடிய ரசித் கான் அந்த அணியின் நட்சத்திர வீரராக வலம் வருகிறார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் கூட பலம் வாய்ந்த நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீசை அசால்டாக ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.

பலவீனம் : ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கண்டிப்பாக வலுவாக இல்லை என்றே கூறலாம். ரஹமதுல்லா குர்பாஸ் போன்ற ஒருசில வீரர்களைத் தவிர அந்த அணியின் பேட்டிங் பலவீனமாகவே உள்ளது, வேகபந்துவீச்சில் நவீன் உல் ஹக் வேறு தரமான பவுலர்கள் இல்லை. 

மேலும் இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் குழப்பங்கள் போன்ற விஷயங்கள் அந்த அணி வீரர்களிடையே மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கூறலாம்.

மொத்தத்தில் இந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா சந்திக்க இருக்கும் 5 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை தவிர எஞ்சிய ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஓரளவு சுலபமாக வெற்றி பெறும் என நம்பலாம். இந்த 5 அணிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுக்கு எதிராக மட்டும் இந்தியா சற்று கவனத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டிய நிலைமை உள்ளது.

Previous Post Next Post

Your Reaction