T20 World Cup 2021: வங்கப்புலி சாகிப் அல் ஹசன் படைத்த 2 புதிய உலகசாதனைகள்

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை 2021 தொடர் சூப்பர் 12 சுற்றை எட்டியுள்ளது, இந்த தொடரில் முதலில் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டிகளில் மகமதுல்லா தலைமையிலான வங்கதேசம் 2வது அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

Shakib Al Hasan In T20 World Cup
Photo Credits : Getty Images


சூப்பர் 12இல் வங்கதேசம்:

குரூப் சுற்றில் அந்த அணி முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியிடம் தோற்ற போதிலும் அதன் பின் ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

இதை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம் பிடித்த வங்கதேசம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோற்றது.

கலக்கும் சாகிப் அல் ஹசன்:

இந்த உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறுவதற்கு அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் ஷாகிப் அல் ஹசன் மிகப் பெரிய பங்காற்றினார், கடந்த சில வருடங்களாகவே வங்கதேசம் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியிலும் ஷாகிப் அல் ஹசன் அந்த அணியின் ஆணிவேராக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்றுவரும் 2021 டி20 உலக கோப்பையில் இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளில் 122* ரன்களையும் 11* விக்கெட்டுகளையும் எடுத்து வங்கதேசத்தின் வெற்றிகளுக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டு வருகிறார்.

  • குறிப்பாக இந்த உலக கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறார்.

புதிய உலக சாதனைகள்:

இந்த தொடரில் அவர் எடுத்துள்ள 11 விக்கெட்களின் வாயிலாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதியதாக 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

முதலாவதாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

  • சாகிப் அல் ஹசன் 2007 - 2021 வரையிலான உலக கோப்பைகளில் இதுவரை பங்கேற்ற 29 போட்டிகளில் 41* விக்கெட்டுக்களை 6.36 என்ற அபாரமான எக்கனாமி விகிதத்தில் வீழ்த்தி இந்த சாதனை படைத்துள்ளார், 3 முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
  • சிறந்த பவுலிங் 4 விக்கெட்கள்/9 ரன்கள்.

இதற்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சாகித் அப்ரிடி 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டின் நாயகன்:

இத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற இலங்கையின் மலிங்காவின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

  • அவர் 2006 முதல் இதுவரை 92 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 117* விக்கெட்டுகளை 6.64 என்ற மிகச் சிறப்பான எகனாமி விகிதத்தில் எடுத்துள்ளார்.
  • 5 முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளையும் 1 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
  • சிறந்த பௌலிங் 5/20.

இதற்கு முன் சமீபத்தில் ஓய்வு பெற்ற இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்கா 2006 முதல் 2020 வரையில் 84 டி20 போட்டிகளில் இலங்கைக்காக 107 விக்கெட்டுகளை 7.42 என்ற எக்கனாமி விகிதத்தில் எடுத்திருந்ததே இதனால் வரை உலக சாதனையாக இருந்தது.

  • 3வது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த டிம் சவுத்தி 100 விக்கெட்டுக்களுடன் உள்ளார்.

வங்கப்புலி சாகிப்:

இது மட்டுமல்லாமல் ஐசிசி கிரிகெட் தொடர்களில் வங்கதேசம் கடைசியாக வென்ற 6 உலககோப்பை போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் தான் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

வங்கதேசம் கடைசியாக வென்ற 6 ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் ஷாகிப் அல் ஹசனின் ஆட்டநாயகன் விருது வென்ற செயல்பாடுகள்:

  • 114 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக, சாம்பியன்ஸ் டிராபி, 2017.
  • 75 ரன்கள் மற்றும் 1 விக்கெட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, உலக கோப்பை, 2019.
  • 124* ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, உலக கோப்பை, 2019.
  • 51 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, உலக கோப்பை, 2019.
  • 42 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் ஓமனுக்கு எதிராக, டி20 உலக கோப்பை, 2021.
  • 46 ரன்கள் மற்றும் 4 விக்கெட்கள், பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக, டி20 உலக கோப்பை, 2021.

இந்த சாதனைகளை எல்லாம் பார்க்கும்போது சாகிப் அல் ஹசனை "வங்கதேசப்புலி" என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என நமக்குத் தோன்றுகிறது.

Previous Post Next Post

Your Reaction