ஸ்டீவ் ஸ்மித் டீம்ல வெச்சிக்கிட்டு எப்படி ஜெயிக்க முடியும் - ஆஸ்திரேலியாவை விளாசும் ஷேன் வார்னே

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடரில் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற 26வது சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின, இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Photo Credits : APF


ஆஸ்திரேலியா ஆல் அவுட் :

இதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். வார்னர் 1, ஸ்மித் 1, மேக்ஸ்வெல் 6, ஸ்டோனிஸ் 0 என அந்த அணியின் முக்கிய பேட்டர்கள் அனைவரும் வரிசையாக நடை கட்டியதால் ஆஸ்திரேலியா 21/4 என திண்டாடியது.

இதிலிருந்து கடைசிவரை மீளமுடியாத ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, அதிகபட்சமாக சரிவில் இருந்து மீட்கப் போராடிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 49 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளும் டைமல் மில்ஸ் மற்றும் கிறிஸ் ஓக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

ஜோஸ் பட்லர் சரவெடி:

இதை அடுத்து 125 என்ற எளிமையான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவித்து அற்புதமான அடித்தளமிட்டனர். ஜேசன் ராய் 22 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் சரவெடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் வெறும் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 71* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் இதனால் வெறும் 11.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை 99 சதவீதம் உறுதி செய்தது.

ஆஸி வரலாற்று தோல்வி :

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா பெரிய அளவில் சோபிக்க தவறியது.

  • இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற ஆஸ்திரேலியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பெற்ற போட்டி இதுவாகும் - 8 விக்கெட்கள்.
  • அதேபோல் நேற்றைய போட்டியில் வெறும் 11.4 ஓவர்களிலேயே சுலபமாக ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியது, இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை ஆஸ்திரேலியா சந்தித்தது - 50 பந்துகள்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் என நட்சத்திரங்கள் அணியில் இருந்த போதிலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய படுதோல்வியை ஆஸ்திரேலியா சந்தித்தது அந்த அணி ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷேன் வார்னே விமர்சனம்:

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்ததற்கான முக்கியமான காரணத்தை அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர்,

"மிட்சேல் மார்ஷை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது, எப்போதும் பவர் பிளே ஓவர்களுக்கு பின்னர் பேட்டிங் செய்ய கூடிய கிளன் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் பவர் பிளேயில் பேட்டிங் செய்தார், அவருக்கு பதில் மார்க்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்து இருக்க வேண்டும். இவை அனைத்துமே ஆஸ்திரேலியாவின் மிகவும் மோசமான திட்டம் மற்றும் நுணுக்கங்களை காட்டுகிறது, மேலும் ஸ்டீவ் ஸ்மித் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றாலும் டி20 கிரிக்கெட் அணியில் அவர் இருக்கக்கூடாது, மிட்சேல் மார்ஷ் அவரின் இடத்தில் இருந்திருக்க வேண்டும்"

என ஆஸ்திரேலியா 11 அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் போட்டியின்போது கையாளப்பட்ட நுணுக்கங்கள் போன்றவற்றை சரமாரியாக விளாசினார்.

மேலும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் வீரர் என்றாலும் டீ20 கிரிக்கெட்டுக்கு அவர் பெரிதளவில் ஒத்து வர மாட்டார் என அனைவருக்கும் தெரியும் வேலையில் அவருக்கு பதில் நல்ல பார்மில் இருக்கும் மிட்செல் மார்ஷ் ஏன் அணியில் சேர்க்க வில்லை என்றும் விமர்சனம் வைத்தார்.

தகுதியான மார்ஷ் :

வார்னே கூறுவது போல ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஆல்-ரவுண்டராக இருக்கும் மிட்செல் மார்ஷ் மிகவும் தகுதியானவர், அவர் இந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட சராசரி விகிதத்தில் ரன்கள் குவித்துள்ளார் அதேபோல் 13.6 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் பந்து வீசியுள்ளார்.

  • மறுபுறம் காயத்திலிருந்து இந்த உலகக் கோப்பைக்கு திரும்பியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 2 இன்னிங்ஸ்சில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தற்போதைய வேளையில் ஆஸ்திரேலியாவிற்கு எஞ்சியிருக்கும் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அடுத்த 2 போட்டிகளில் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படுவாரா என்பதே அந்த அணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction