T20 World Cup 2021: ரவிச்சந்திரன் அஷ்வினை தொடர்ந்து ஏன் கழட்டி விடுறிங்க, விராட் கோலிக்கு திலிப் வெங்சர்க்கார் கேள்வி

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா களம் இறங்கிய முதல 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

Photo Credits : Getty Images


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக களம் இறங்கிய இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சொதப்பி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.

ரவிச்சந்திரன் அஷ்வின் இல்லை:

இந்த உலக கோப்பையில் 4 வருடங்களுக்கு பின்பு இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை, கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஒரு டி20 போட்டியில் களமிறங்கிய அவர் இந்த உலக கோப்பையில் ஆச்சரியப்படும் வண்ணமாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட போதிலும் விளையாடும் லெவன் அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை, இத்தனைக்கும் இந்த உலககோப்பை துவங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பவர் பிளே ஓவரில் பந்துவீசி வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இப்படி சிறப்பாக செயல்பட்ட போதிலும் லெவன் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் பெஞ்சில் அமர வைப்பதற்கு தான் தேர்வு செய்யப்பட்டாரா என்று இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

திலிப் வெங்சர்க்கார் கேள்வி:

இந்த இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் இந்திய அணி நிர்வாகம் சமீப காலமாக அணியில் எடுக்கவில்லை என இந்தியாவின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி பிடிஐ இணையதளத்தில்,

மிகவும் நீண்ட காலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் கழட்டிவிட படுவது ஏன்? என்பது பற்றி ஆராய வேண்டியுள்ளது. 3 வகையான கிரிக்கெட்டிலும் 600 விக்கெட்டுகளும் மேல் எடுத்த அவர் உங்களின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர், ஒரு சீனியர் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அவரை ஏன் நீங்கள் தேர்வு செய்ய மறுக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. லெவனில் எடுக்கவில்லை என்றால் பின்னர் எதற்காக அவரை தேர்வு செய்கிறீர்கள்

என விராட் கோலியிடம் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏன் இந்திய அணியில் சமீப காலங்களாக எடுப்பதில்லை என மறைமுகமாக கேள்வியை எழுப்பினார்.

வெங்சர்க்கார் கூறுவது போல டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாது சமீபத்தில் இங்கிலாந்தில் இந்தியா களம் இறங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கூட உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஸ்பின் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை விராட்கோலி எடுக்கவில்லை.

  • கடைசியாக அவர் கடந்த மார்ச் மாதம் அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிற்காக ஒரு போட்டியில் விளையாடினார் என்பது அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியில் கழட்டி விட படுகிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

என்னதான் ஆச்சு:

தற்போது இந்திய அணி புத்துணர்ச்சி இன்றி தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நீண்ட நாள்கள் இருப்பதாலா என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் சமீப காலங்களில் இது போன்ற ஒரு மோசமான பாடி லாங்குவேஜ் கொண்ட இந்திய அணியை நான் பார்த்ததில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர்கள் மோசமாக விளையாடினார்கள், டி20 கிரிக்கெட்டில் நீங்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்

என இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தற்போதைய நிலைமை பற்றி கூறிய திலிப் வெங்சர்க்கார் இது போன்றதொரு மோசமான செயல்பாட்டை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என தனது வேதனையை தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction