ஆஹா அடுத்த 10 ஆண்டுகளில் 15 உலககோப்பைகள், இந்தியாவில் எத்தனை தெரியுமா - ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கிரிக்கெட்டை உலக அளவில் பிரபலப்படுத்தும் வண்ணமாகவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கிடையே சாம்பியனை உருவாக்கும் வண்ணமாகவும் அவ்வப்போது உலக கோப்பைகளை நடத்தி வருகிறது.

Photo Credits : ICC


அந்த வகையில் இந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்க இருந்த 20 ஓவர் உலககோப்பை சமீபத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

அடுத்த 10 ஆண்டுகள்:

இந்த நிலையில் வரும் 2031 வரை உலக அளவில் நடைபெற இருக்கும் ஆடவர் உலக கோப்பை பற்றிய முழு விவரத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி அடுத்த 10 வருடங்களில் உலகம் முழுவதிலும் 10 வெள்ளை பந்து உலகக் கோப்பைகள் 5 சிவப்பு நிற பந்து உலக கோப்பைகள் என மொத்தம் 15 உலக கோப்பையில் நடைபெற உள்ளன.

  • இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் 2 முறை இந்த கால கட்டத்தில் நடைபெற உள்ளது.

15 உலககோப்பைகளும் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன. அதை பற்றிய முழு விபரம் இதோ:

டி20 உலககோப்பை 2022 : வரும் 2022ஆம் ஆண்டு வரலாற்றில் 8வது ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது, அடுத்த வருடம் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்கும் இந்த உலகக் கோப்பை நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

50 ஓவர் உலககோப்பை 2023: ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் முதன்மையானதும் உலக அளவில் பிரசித்தி பெற்றதுமான 50 ஓவர் உலகக் கோப்பை வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது, கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்த உலக கோப்பை நடைபெற்றது.

அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின் இந்த உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த உலக கோப்பையின் சிறப்பம்சம் என்னவெனில் 2011 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா நடத்தியது, ஆனால் 2023இல் இந்தியா மட்டும் தனித்து நடத்த உள்ளது.

டி20 உலககோப்பை 2024: வரலாற்றின் 9வது 20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அதன் அருகில் இருக்கும் அமெரிக்கா ஆகிய 2 நாடுகளும் கூட்டாக இணைந்து நடத்த உள்ளன.

சாம்பியன்ஸ் ட்ராபி 2025: ரசிகர்களிடையே மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 2017க்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானில் வரும் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

  • எல்லை பிரச்சனை காரணமாக பரம எதிரியான பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று இந்த உலக கோப்பையில் இந்தியா பங்கேற்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டி20 உலககோப்பை 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 9வது முறையாக 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது.

உலககோப்பை 2027: ஐசிசி நடத்த உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை 2027 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. தென்னாபிரிக்காவுடன், ஜிம்பாப்வே, நமீபியா, போன்ற கத்துக்குட்டி நாடுகளும் இந்த உலகக் கோப்பையை இணைந்து நடத்தும் உள்ளன.

  • கடந்த 2003க்கு பின் 50 ஓவர் உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அருகில் இருக்கும் நாடுகள் 2027இல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலககோப்பை 2028: வரலாற்றின் 10வது ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 நாடுகளில் சேர்ந்து நடைபெற உள்ளது.

சாம்பியன்ஸ் ட்ராபி 2029: வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய மண்ணில் நீண்ட நாட்களுக்குப்பின் நடைபெற உள்ளது, இந்த உலகக் கோப்பையை எந்த ஒரு அண்டை நாட்டுடன் கூட்டாக அல்லாமல் இந்தியா மட்டும் தனித்து நடத்த உள்ளது.

டி20 உலககோப்பை 2030 : வரும் 2030ஆம் ஆண்டு நடைபெறும் வரலாற்றின் 11வது டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அதன் அருகில் இருக்கும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்த உள்ளது.

உலககோப்பை 2031: 2031 ஆம் ஆண்டு ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 2011 போல இந்த உலகக் கோப்பையை அண்டை நாடான வங்க தேசத்துடன் இந்தியா இணைந்து நடத்த உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

இது மட்டுமல்லாமல் சிவப்பு நிற பந்துக்கு என அறிமுகப்படுத்த பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டிகள் 2023, 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது, இந்த இறுதிப் போட்டிகள் எங்கு எங்கு நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு உலக கோப்பை என்ற வகையில் அடுத்த 10 வருடங்களில் 10 வெள்ளை பந்து உலக கோப்பைகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous Post Next Post

Your Reaction