IPL 2022 Mega Auction : சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்க போகும் 4 உத்தேச வீரர்கள்

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை சேர்ந்த புதியதாக 2 ஐபிஎல் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது, இதையடுத்து இனி வரும் ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.

Photo : BCCI/IPL


மெகா ஏலம் :

புதியதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 2022 சீசனுக்காக மெகா ஏலத்தையும் நடைபெற உள்ளது, இதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அவர்களுக்கு அதிகபட்சமாக எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் போன்ற முக்கியமான விதிமுறைகளை ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

அந்த விதிமுறைகளின்படி ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

  • அதில் 3 பேர் இந்தியர் மற்றும் ஒருவர் வெளிநாட்டவராக இருக்கலாம் அல்லது 2 இந்தியர் 2 வெளிநாட்டவராக இருக்கலாம்.

அந்த வகையில் ஐபிஎல் 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று 4வது முறையாக கோப்பையை கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கப் போகும் 4 உத்தேச வீரர்கள் இதோ:

1. எம்எஸ் தோனி : 

இந்தியாவுக்கு 3 வகையான உலக கோப்பை உட்பட ஏராளமான சாதனைகளை படைத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை மையமாக வைத்து தோற்றுவிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2008 முதல் தற்போது வரை கேப்டனாக இருந்து வருகிறார்.

  • இந்தியாவை போலவே சென்னைக்காகவும் அவர் சிறப்பான கேப்டன்ஷிப், அதிரடி பேட்டிங் பினிஷிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங் என அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

தற்போது 40 வயதை கடந்துள்ள அவர் வயது காரணமாக சமீபகாலமாக சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் சிறப்பான கேப்டன்ஷிப் மற்றும் விக்கெட் கீப்பிங் வாயிலாக செய்து சென்னயின் வெற்றிக்கு இன்னும் கூட ஆணி வேராக இருக்கிறார்.

அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே பலருக்கும் தோனி தான் நினைவுக்கு வருவார் அந்த அளவுக்கு சிஎஸ்கே எனும் பிராண்டை உருவாக்கியதில் தோனியின் பங்கு 100 சதவீதம் உள்ளது, அவர் மோசமாக பேட்டிங் செய்தபோது கூட "அணியில் தல விளையாடினால் மட்டும் எங்களுக்கு போதும் " என பல சென்னை ரசிகர்கள் கூறினார்கள், அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Photo : BCCI/IPL


2020 ஆம் ஆண்டு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் முடியாமல் சென்னை தள்ளாடிய போது விரைவில் இளம் வீரர்கள் கொண்ட அணி உருவாக்கப்படும் என தோனி தெரிவித்திருந்தார் ஆனாலும் 2022 ஆம் ஆண்டு சீசனுக்கு சென்னை தக்க வைக்கும் முதல் வீரர் எம்எஸ் தோனியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

  • ஏனென்றால் தோனி இல்லாமல் சென்னை இல்லை சென்னை இல்லாமல் தோனி இல்லை என உண்மையான வார்த்தைகளை அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2. ரவீந்திர ஜடேஜா :

இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய நிலைமையில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா நாட்கள் செல்ல செல்ல முன்பை விட அதிகமாக ஜொலிக்க தொடங்கியுள்ளார், குறிப்பாக 2019 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் அவரின் பேட்டிங் அபாரமாக உள்ளது.

இதன் காரணமாக தோனி பார்மில் இல்லாத கடந்த சில வருடங்களாக சென்னையின் பினிஷெராக ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு வருகிறார், மின்னல் வேக பீல்டிங் தேவையான நேரத்தில் பந்து வீச்சு என தவிர்க்க முடியாத வீரராக இருக்கும் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கண்டிப்பாக 2வது வீரராக தக்க வைக்கும் என நம்பலாம்.

3. ருதுராஜ் கைக்வாட் :

ஐபிஎல் 2021 தொடரில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் மிக முக்கிய பங்காற்றினார்.

2020 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சென்னை தவித்த வேளையில் பற்றிய இந்த "ஸ்பார்க்" அடுத்த வருடமே கோப்பையை கையில் ஏந்த வைத்து பெருமைப்படுத்தியது, ஏற்கனவே இளம் வீரர்களைக் கொண்ட அணி வருங்காலத்தில் உருவாக்கப்படும் என தோனி கூறியிருக்கும் வேளையில் சென்னை தக்கவைக்கும் 3வது வீரராக ருத்ராஜ் கண்டிப்பாக இருப்பார்.

4. பப் டு பிளேஸிஸ் :

முன்னாள் கேப்டன் என்றும் கூட மதிக்காமல் தென் ஆப்பிரிக்கா கழட்டிவிட்ட பப் டு ப்லஸ்ஸிஸ் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக பேட்டிங் செய்து 633 ரன்கள் குவித்து அசத்தினார், சிறப்பான பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் பவுண்டரியில் சிக்சர்களை தடுத்து கேட்ச்சாக மாற்றும் இவரை வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் சென்னை கண்டிப்பாக தக்க வைக்கும் என நம்பலாம்.

5. ட்வயன் ப்ராவோ :

வயதானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பது போல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ தொடர்ந்து சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார், இறுதிக்கட்ட ஓவரில் அபாரமாக பந்து வீசும் வல்லமை படைத்த இவர் தேவைப்படும் வேளையில் பேட்டிங்கிலும் பட்டாசாக வெடிக்கிறார்.

இவரையும் மெகா ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுரேஷ் ரெய்னா : ஆமா எல்லாம் சொன்னீங்க ஆனால் சின்ன தல சுரேஷ் ரெய்னா எங்கே என்று பலரும் கேட்கலாம். மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நட்சத்திர அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த சில வருடங்களாகவே பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார், இதனால் இந்த சீசனில் பிளே ஆப் சுற்றில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும் 2020 ஆம் ஆண்டு பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சென்னை தடுமாறிய வேளையில் சுரேஷ் ரெய்னா குடும்பத்தினருடன் இருந்தது அவரது தவறில்லை என்றாலும் அடுத்த சீசனுக்கு அவரை சென்னை நிர்வாகம் தக்கவைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது தெரியவில்லை.

ஒருவேளை அவரை தக்க வைத்தால் அது கிரிக்கெட் என்ற ஒன்றையும் தாண்டி சுரேஷ் ரெய்னா மீது சென்னை நிர்வாகம் வைக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டும், மேலும் அவருக்கு தோனியின் ஆதரவு 100% உள்ளதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous Post Next Post

Your Reaction