Syed Mushtaq Ali Trophy 2021 : பிறந்தநாளில் சாய் கிசோர் ஹாட்ரிக், பாண்டிச்சேரியை மட்டையாக்கி தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது, 13வது முறையாக தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 38 அணிகள் 149 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

Shai Kishore
Photo Credits : BCCI Domestic


தமிழ்நாடு - பாண்டிச்சேரி :

இந்த தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு இன்று தனது 3வது போட்டியில் பக்கத்து ஊரான பாண்டிச்சேரியை எதிர்கொண்டது, லக்னோவில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதை அடுத்து களமிறங்கிய பாண்டிச்சேரி அணியின் தொடக்க வீரர் சாகர் திரிவேதி 1 ரன்னில் அவுட் ஆனார், அடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் தாமோதரன் ரோகித் மற்றொரு தொடக்க வீரர் ரகுபதி உடன் இணைந்து அணியை மீட்க முயன்றார், இதில் ரகுபதி 32 ரன்களும் தாமோதரன் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

சாய் கிசோர் ஹாட்ரிக் :

அடுத்த வந்த டோஹ்ரா 1 ரன்களில் அவுட் ஆனதால் தமிழ்நாட்டின் அபாரமான பந்து வீச்சில் மிடில் ஓவர்களில் பாண்டிச்சேரி அணியால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை, இருப்பினும் அடுத்ததாக பேட்டிங் செய்ய களமிறங்கிய பவன் தேஷ்பாண்டே மற்றும் பாபித் அஹமது ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முயன்றனர், அந்த சமயத்தில் அபாரமாக பந்துவீசிய நடராஜன் தேஷ்பாண்டேவை 25 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவர் செய்தார்.

19வது ஓவரில் பாண்டிச்சேரி 125/5 ரன்கள் எடுத்திருந்த போது அந்த ஓவரை வீசிய தமிழகத்தின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 19.2 வது பந்தில் சிறப்பாக விளையாடி பினிஷிங் செய்ய முயன்ற பாபித் அஹமதை 27 ரன்களில் அவுட் செய்தார், 19.3 வது பந்தில் இக்ளஸ் நாகாவை டக் அவுட் செய்த அவர் 19.4வது பந்தில் அடுத்ததாக களமிறங்கிய சுபோத் பாட்த்தியையும் டக் அவுட் செய்து அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

  • தனது 25வது பிறந்த நாளான இன்று ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த சாய் கிஷோர் தனது பிறந்தநாளை அற்புதமாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியுடன் கொண்டாடினார்.

இதனால் சிறப்பாக பினிஷிங் செய்ய முடியாத பாண்டிச்சேரி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129/8 ரன்கள் மட்டுமே எடுத்தது, தமிழ்நாடு சார்பில் சாய் கிசோர் 4 விக்கெட்டுகளும் முகமது 2 விக்கெட்டுகளும் நடராஜன் மற்றும் சந்திப் வாரியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர்.

தமிழ்நாடு வெற்றி :

பின்னர் 130 என்ற எளிய இலக்கை துரத்திய தமிழ்நாடு அணிக்கு தொடக்க வீரர் ஜெகதீசன் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும் அடுத்ததாக வந்த பாபா அபராஜித் 24 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார் ஆனால் மறுபுறம் அபாரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் வெறும் 49 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 75* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.

  • இதனால் வெறும் 16.1 ஓவரில் 130/2 ரன்களை எடுத்த தமிழ்நாடு 8 விக்கெட் வித்தியாசத்தில் கனகச்சிதமான வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் வெற்றி :

இந்த தொடரில் ஏற்கனவே தமிழ்நாடு களமிறங்கிய முதல் 2 போட்டிகளில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது, ஆகவே பாண்டிச்சேரிக்கு எதிரான இந்த வெற்றியையும் சேர்த்து சையது முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 தொடர் வெற்றிகளை பெற்று ஹாட்ரிக் வெற்றிகளை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

  • இதன் வாயிலாக எலைட் குரூப் ஏ பிரிவில் 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து இந்த தொடரில் தமிழ்நாடு தனது 4வது போட்டியில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி காலை 8.30 மணிக்கு லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் கோவா அணியை எதிர் கொள்கிறது.

Previous Post Next Post

Your Reaction