ஹேப்பி பர்த்டே ராகுல் டிராவிட் ! மிரளவைக்கும் பெருஞ்சுவரின் முக்கிய உலகசாதனைகள் இதோ

இந்திய கிரிக்கெட் கண்ட மகத்தான ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், டெஸ்ட் மற்றும் ஒன்டே ஆகிய முக்கிய கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மகத்தான பேட்டரான இவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய வீரராக இன்றும் ஜொலிக்கிறார்.

Photo Credits : Getty Images


பொதுவாகவே எவ்வளவு கடினமான தருணங்களாக இருந்தாலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் விளையாடி எதிரணிகளின் பொறுமையை சோதித்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுத் தருவதில் இவர் வல்லவர், அதிலும் சோயப் அக்தர் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்கள் பல தூரம் ஓடி வந்து பல கிலோ மீட்டர் வேகத்தில் வேகமாக பந்து வீசினாலும் அதை அப்படியே லாவகமாக தடுத்து நிறுத்தி விளையாடும் தடுப்பாட்டத்திற்கு  பெயர் போனவர்.

நல்ல மனிதர்:

ஓய்வு பெற்ற பின்னும் கூட இந்திய கிரிக்கெட் மீது உள்ள அக்கறையால் 2016 முதல் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 ஆகிய இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து பல தரமான வீரர்களை உருவாக்கி உலக அரங்கில் இந்தியா உலக தரம் வாய்ந்த முதல் அணியாக உருவெடுக்க பாடுபட்டவர், பல நாடுகள் தங்களது முதன்மையான அணியில் தரமான வீரர்கள் இல்லாமல் திண்டாடும் நிலையில் இளம் வீரர்களை தரமானவர்களாக மாற்றி ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள் வெவ்வேறு இடங்களில் விளையாடும் அளவுக்கு இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக செதுக்கியவர்.

  • தற்போது இந்திய முதன்மை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள டிராவிட் கிரிக்கெட் என்ற ஒன்றை தாண்டி ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர் என்றால் அது மிகையாகாது.

மிரள வைக்கும் சாதனைகள்:

அவரின் இந்தப் பொன்னான பிறந்த நாளில் உலக கிரிக்கெட் அரங்கில் அவர் செய்த சில முக்கிய உலக சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற உலக சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார், இவர் 31258 பந்துகளை சந்தித்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

  • இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 30000 பந்துகளை கூட சந்தித்தது கிடையாது என்பதாலேயே இவர் கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

2. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் களத்தில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற உலக சாதனைக்கும் ராகுல் டிராவிட் சொந்தக்காரர் ஆவார்.

  • இவர் தனது வாழ்நாளில் 44,152 நிமிடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையுடனும் நிதானத்துடனும் எதிரணி பந்துகளை சந்தித்த இவரை பொறுமையின் சிகரம் என அழைத்தால் அதில் எந்த தவறும் இல்லை.

3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளிலும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றையும் ராகுல் டிராவிட் எழுதியுள்ளார்.

  • இவர் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 10 முழு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளிலும் சதம் அடித்த முதல் வீரர் ராகுல் டிராவிட் என்பது இந்தியாவிற்கு பெருமை ஆகும்.

4. இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற உலக சாதனையும் ராகுல் டிராவிட் செய்துள்ளார்.

  • இவர் டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்ச்களை பிடித்து இந்த சாதனை படைத்துள்ளார்.

5. இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 கிரிக்கெட் போட்டிகளிலும் 10000 ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் சச்சினுக்கு பின் அதிக போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையையும் டிராவிட் பெற்றுள்ளார்.

  • இது போக இந்திய அளவில் ராகுல் டிராவிட் படைத்துள்ள சாதனைகளை பட்டியலிட்டால் அதற்கு ஒரு பதிவு போதாது.
6. கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் 21ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் டிராவிட் படைத்துள்ளார்.

  • தற்போது இந்தியா விளையாடி வரும் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் (2006ஆம் ஆண்டு) என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

7. பயிற்சியாளராக கடந்த 2018ஆம் ஆண்டு ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையையும் ராகுல் டிராவிட் வென்ற்றுள்ளார். 

விருதுகள்:

அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷண் விருது, ஐசிசி கிரிக்கெட் வீரர் 2004 ஆகிய விருதுகளை வென்ற இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான இவரை "ஹால் ஆஃப் பேம்" விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction