ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள்

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 7-ஆம் தேதியன்று நடந்த 14-ஆவது லீக் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 ரன்களை போராடி எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்களை விளாசினார்.

Pat Cummins
Photo Credits : BCCI/IPL

அவருக்கு துணையாக நின்ற இளம் வீரர் திலக் வர்மா 38* (27) ரன்களும் கடைசி நேரத்தில் வெறும் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 22* ரன்களை விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

மிரட்டிய பட் கமின்ஸ், மும்பை தோல்வி:

அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 (11) ரன்களிலும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 (6) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். அந்த மோசமான தொடக்கத்தில் தடுமாறிய கொல்கத்தாவுக்கு அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 17 (12) ரன்களிலும் நிதிஷ் ராணா 8 (7) ரன்களிலும் அவுட்டாகி மிடில் ஆர்டரில் கை கொடுக்கத் தவறினர். போதாகுறைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ரசல் 11 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 101/5 என மீண்டும் தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது.

Pat Cummins
Photo Credits : BCCI/IPL

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் அவருடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் முதல் பந்தில் இருந்தே மும்பையை புரட்டி எடுக்க தொடங்கினார். வெறும் 15 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் உட்பட அரைசதம் கடந்து 56* ரன்கள் குவித்து ருத்ர தாண்டவம் ஆடியதால் 16-வது ஓவரிலேயே 162/5 ரன்களை எடுத்த கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. அவருக்கு உறுதுணையாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 50 (41) ரன்களை விளாசி அந்த அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.

Photo Credits : BCCI/IPL

முன்னதாக இந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை தொட்ட பட் கமின்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுலுடன் பகிர்ந்து கொண்டார். இதற்குமுன் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் இதேபோல் 14 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த ராகுலுக்கு நிகராக இப்போது ஒரு பவுலரான கமின்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:

1. பட் கமின்ஸ் (கொல்கத்தா) : 14 பந்துகள், மும்பைக்கு எதிராக, 2022*

2. கேஎல் ராகுல் (பஞ்சாப்) : 14 பந்துகள், டெல்லிக்கு எதிராக, 2018.

3. யூசுப் பதான் (கொல்கத்தா) : 15 பந்துகள், ஹைதெராபாத்க்கு எதிராக, 2014.

4. சுனில் நரேன் (கொல்கத்தா) : 15 பந்துகள், பெங்களூருவுக்கு எதிராக, 2017.

Previous Post Next Post

Your Reaction