2007 - 2016 வரை : டி20 உலககோப்பை வரலாற்றில் இந்தியாவின் செயல்பாடுகள்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் ஏற்கனவே அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியுள்ளது. தற்போது ஸ்காட்லாந்து, வங்கதேசம் போன்ற சிறிய அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த உலக கோப்பையின் பிரதான சுற்று சூப்பர் 12 சுற்று துவங்க உள்ளன.

Indian Cricket Team in T20 World Cup
Indian Cricket Team in T20 World Cup (Photo : Getty Images)


இந்தியா :

இந்த உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்ள உள்ளது.

சரி இந்த உலக கோப்பையை முன்னிட்டு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 6 ஐசிசி டி20 ஓவர் உலகக் கோப்பைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பற்றி பார்ப்போம் வாங்க:

1. ஐசிசி டி20 உலககோப்பை 2007, தென்ஆப்பிரிக்கா :

செயல்பாடு : சாம்பியன்

2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் லீக் சுற்றுடன் வெளியேறிய ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா படுதோல்வி அடைந்தது, அதன் காரணமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்து யாரும் எதிர்பாராத வண்ணம் எம்எஸ் தோனி தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் பங்கேற்றது.

மீண்டும் தோல்வி தான் என இந்தி ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தானுக்கு எதிராக டையில் முடிந்த முதல் போட்டியை "பவுல் அவுட்" முறையில் வெற்றி பெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் தோற்றது.

இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட வெறும் 12 பந்துகளில் 50 ரன்கள் விளாச அபார வெற்றி பெற்றது, அரையிறுதிப் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அசுர பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவை அபார பந்துவீச்சால் தோற்கடித்தது.

இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா வெற்றியை நூலிழையில் எட்டிப் பிடித்து வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று வரலாற்றின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

2. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2010, இங்கிலாந்து:

செயல்பாடு : சூப்பர் 8

இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் 2வது டி20 உலக கோப்பையில் பங்கேற்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கு எதிராக களம் இறங்கிய தனது முதல் 3 போட்டிகளிலும் 3 தொடர் தோல்விகளை பெற்று சூப்பர்-8 சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

  • அந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அயர்லாந்திடம் மட்டும் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்த இந்தியா ஆறுதல் அடைந்தது.

3. ஐசிசி டி20 உலககோப்பை, வெஸ்ட்இண்டீஸ், 2010:

செயல்பாடு : சூப்பர் 8

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற 3வது டி20 உலக கோப்பையில் முதல் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா நல்ல தொடக்கம் பெற்றது, இருப்பினும் அதன் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் தோற்று சூப்பர் 8 சுற்றுடன் மீண்டும் வெளியேறியது.

4. ஐசிசி 20 ஓவர் உலககோப்பை, இலங்கை, 2012:

செயல்பாடு : சூப்பர் 8

இலங்கையில் நடைபெற்ற 2012 ஐசிசி உலகக் கோப்பையில் குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. 

சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போதிலும் பாகிஸ்தானிடம் வெற்றி பெற்ற இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அதிலும் குறிப்பாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற ரன் ரேட் மிகப்பெரிய தடையாக இருந்தது, அதாவது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 152 ரன்கள் எடுத்தது.

பின்னர் தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களில் சுருட்டினால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

  • இதன் காரணமாக ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவின் 2012 டி20 உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது.

5. ஐசிசி டி20 உலகக் கோப்பை, வங்கதேசம், 2014:

செயல்பாடு : இறுதி போட்டி

அண்டை நாடான வங்கதேசத்தில் நடைபெற்ற 2014 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்து வந்தது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக வெற்றிகளை குவித்த இந்தியா அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆனால் அதுவரை ஒரு தோல்வியை கூட பார்க்காத இந்தியா இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி இலங்கையிடம் படுதோல்வி அடைந்து வெறும் கையுடன் நாடு திரும்பியது.

Virat Kohli In T20 World Cup
Virat Kohli (Photo : Getty Images)


அந்த நாளில் இந்தியா எடுத்த 130 ரன்களில் விராட் கோலி 77 ரன்கள் குவித்த போதிலும் இதர இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

  • கோப்பையை இந்தியா வெல்ல முடியாமல் போனாலும் அந்த பைனல் மட்டுமல்லாது அந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் பங்கேற்ற விராட் கோலி 319 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

6. ஐசிசி டி20 உலகக் கோப்பை, இந்தியா - 2016:

செயல்பாடு : அரைஇறுதி

சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற 2016 20 ஓவர் உலகக் கோப்பையை நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய இந்தியா அதன்பிறகு வங்கதேசம், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

  • குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முக்கிய போட்டியில் வெறும் 1 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது.

இருப்பினும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோசமான பவுலிங் காரணமாக இந்தியா படுதோல்வி அடைந்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

  • இருப்பினும் 5 போட்டிகளில் 273 ரன்கள் குவித்த விராட்கோலி தொடர்ந்து 2வது முறையாக தொடர் நாயகன் விருது வென்றார்.

செயல்பாடுகள் :

வரலாற்றில் நடைபெற்ற இந்த 6 உலக கோப்பைகளிலும் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் இந்திய பங்கு பெற்றது. 2009, 2010, 2012 ஆகிய 3 உலக கோப்பைகளை தவிர 2007-இல் சாம்பியன் 2014இல் 2வது இடம் மற்றும் 2016இல் அரையிறுதி என வரலாற்றில் இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் ஓரளவு சிறப்பாகவே இந்தியா செயல்பட்டுள்ளது.

மொத்தமாக 6 உலக கோப்பைகளிலும் இந்தியா:

  • பங்கேற்ற போட்டிகள் - 33
  • வெற்றிகள் - 21
  • வெற்றி விகிதம் - 63.60

இதிலிருந்தே டி20 உலக கோப்பைகளில் இந்தியா ஓரளவு சிறப்பாக செயல்பட்டு உள்ளது என தெரிந்து கொள்ளலாம், மேலும் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 6 உலக கோப்பைகளிலும் இடம் பெற்ற தோனி இந்த முறை ஒரு ஆலோசகராக மட்டுமே இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

முதல் முறையாக தோனி கேப்டனாக அல்லாத விராட் கோலி தலைமையில் இந்தியா இந்த 2021உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது, குறிப்பாக 2017 முதல் இந்தியாவின் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கடைசி முறையாக இந்த தொடரில் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்யவுள்ளார் என்பதால் இந்தியா வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் ஆர்வம் கொண்டு உள்ளார்கள்.

Previous Post Next Post

Your Reaction