கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக் படைத்துள்ள அதிரடி சாதனைகளின் பட்டியல்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இந்தியாவிற்காக 374 சர்வதேச போட்டிகளில் 17253 ரன்களை அடித்ததுடன் 2007 மற்றும் 2011 ஆகிய உலக கோப்பைகளை வென்ற அவருக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

List Of Records By Virender Shewag
Virender Sehwag (Photo Credits : Getty Images)


சரவெடி சேவாக் :

இந்திய கிரிக்கெட்டை குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை விரேந்திர சேவாக்கிற்கு முன் பின் என 2 வகையாக பிரிக்கலாம் ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தையை கொண்டு வந்தவர் விரேந்திர சேவாக் என்பதே உண்மையாகும்.

குறிப்பாக 5 நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டை கூட அதிரடியாக விளையாடி அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்த பெருமை வீரேந்திர சேவாக்கை மட்டுமே சேரும், இன்று ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் போட்டிகளின் வருகையால் யார் வேண்டுமானாலும் அதிரடியாக விளையாடலாம்.

ஆனால் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வருவதற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போலவும் ஒருநாள் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போலவும் விளையாடியவர் இந்த வீரேந்திர சேவாக் என்றால் மிகையாகாது, டெஸ்ட் ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் இவர் சந்திக்கும் முதல் பந்திலேயே பவுண்டரி பறக்க விடுவதில் இவருக்கு நிகர் யாருமே கிடையாது.

சரி சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் பிறந்த நாளில் விரேந்திர சேவாக் படைத்துள்ள முக்கிய சாதனைகளின் பட்டியல் பார்ப்போம்:

1. முச்சதம் : டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் என எத்தனையோ ஜாம்பவான்கள் தொடமுடியாத முச்சததை அடித்த முதல் இந்திய வீரர் சேவாக் ஆவார்.

  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் - 319 ரன்கள்.

2. ப்ராட்மேனுக்கு நிகர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 முத்சதங்களுடன் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் சேவாக் பகிர்ந்து கொண்டுள்ளார்.

  • அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 2 முறை 250கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் டான் பிராட்மேனுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 முச்சதங்கள் விளாசிய ஒரே ஆசிய பேட்ஸ்மேன் சேவாக் ஆவார்.

3. ஓப்பனிங் வீரர் : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், ஒரு போட்டியில் அதிக 150+ ரன்கள், 200+ ரன்கள், 250+ ரன்கள் அடித்த ஓபனிங் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

  • அதிக ரன்கள் - 16119
  • அதிக 150 ரன்கள் - 16
  • அதிக 200 ரன்கள் - 7
  • அதிக 250 ரன்கள் - 4

4. இரட்டை சதம்: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் ஆகிய சாதனைகளும் அவரைச் சேரும்.

  • 219 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2012.

5. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என 2 வகையான கிரிக்கெட்டிலும் 7500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த ஒரே ஓபனிங் பேட்ஸ்மேன் சேவாக் ஆவார்.

6. சிக்ஸர் கிங் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட இந்திய வீரர் - 91 சிக்சர்கள்.

7. பிடித்த வார்த்தை வேகம்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300, 250, 200 ரன்கள் அடித்த அபாரமான ஆசியாவின் அதிரடி பேட்ஸ்மேன்

  • 300 ரன்கள் - 278 பந்துகள்.
  • 250 ரன்கள் - 207 பந்துகள்.
  • 200 ரன்கள் - 168 பந்துகள்.

8. உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் - 81 பந்துகள்.

9. டெஸ்ட் மற்றும் ஒருநாள் என 2 வகையான கிரிக்கெட்டிலும் இரட்டை சதங்களை அடித்த முதல் ஓபனிங் பேட்ஸ்மேன்.

10. ஆல் ஏரியா கிங்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண் மற்றும் அயல்நாட்டு மண்ணில் முச்சதம் அடித்த ஒரே ஆசிய பேட்ஸ்மேன்.

  • 319 - தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, சென்னை, 2008.
  • 309 - பாகிஸ்தானுக்கு எதிராக, முல்தான், 2004.

11. முதல் கேப்டன் : டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்து அதில் வெற்றிகளையும் பதிவு செய்த முதல் கேப்டன்.

12. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்கள் குவித்த ஓபனிங் பேட்ஸ்மேன் - 83.10 ஸ்ட்ரைக் ரேட்.

13. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய பேட்ஸ்மேன் - 284* ரன்கள்.

14. உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து முச்சதத்தை பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன்.

15. காலண்டர் அதிரடி: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர் பறக்கவிட்ட இந்திய பேட்ஸ்மன் - 22 சிக்ஸர்கள்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பவுண்டரிகளை விளாசிய ஒரே இந்திய பேட்ஸ்மன்.

16. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகளை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் - 47 பவுண்டரிகள்.

17. சவால் மிகுந்த இலங்கை மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் முதல் மற்றும் ஒரே இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன், அதேபோல் பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்.

18. குறைவான பந்துகள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பந்துகளுக்கு குறைவாக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்.

  • சேவாக் 7 முறை 100 பந்துகளுக்கு முறைகள் குறைவாக சதங்கள் அடித்து இந்த சாதனை படைத்துள்ளார்.

19. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 பந்துகளுக்கும் குறைவாக அதிக இரட்டை அடித்த பேட்ஸ்மேன்.

  • 3 முறை 200 பந்துகளுக்கு குறைவாக இரட்டை சதங்கள் சேவாக் அடித்துள்ளார்.

20. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10 சதங்கள் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்.

இது மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஆசிய அளவிலும் இன்னும் பல சாதனைகளை வீரேந்திர சேவாக் படைத்துள்ளார், மேற்கூறிய சாதனைகளை படிப்பதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி உள்ளார் என்பது நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கூட முதலில் பேட்டிங் செய்த போதும் சேசிங் செய்த போதும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மன், தொடர்ச்சியாக அதிக அரை சதங்கள் (5 முறை) அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளிட்ட பல சாதனைகளை விரேந்தர் சேவாக் அசால்டாக படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி மன்னனுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Search Tags: List Of Records By Virender Sehwag, Virender Sehwag Records in Cricket.

Previous Post Next Post

Your Reaction