ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
Moin Ali and MS Dhoni |
கலக்கும் மொய்ன் அலி:
இந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு பேட்டிங் மற்றும் பௌலிங் என 2 துறைகளிலும் மொயின் அலி அபாரமாக செயல்பட்டு வருகிறார், குறிப்பாக இங்கிலாந்து எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வெறும் 55 ரன்களுக்கு இங்கிலாந்து சுருட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட மொய்ன் அலி ஆட்டநாயகன் விருதை வென்றார், அதேபோல் பங்களாதேஷிற்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் வெறும் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.
- இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவர் இந்த உலக கோப்பையில் எடுத்துள்ள 4 விக்கெட்டுகளும் பவர் பிளேயில் எடுத்தவையாகும்.
தடுமாறிய மொய்ன் அலி:
அவரின் இந்த சிறப்பான செயல்பாடுகளுக்கு இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பின்னணியில் உதவி உள்ளார் என்றே கூறலாம், 2021 ஐபிஎல் தொடருக்கு மொய்ன் அலியை 7 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஏனெனில் அந்த சமயத்தில் சிறப்பாக செயல்படுத்த தவறி வந்ததால் அவர் இங்கிலாந்துக்காக தொடர்ச்சியாக விளையாடாமல் இருந்து வந்தார், ஐபிஎல் ஏலத்தில் எடுத்த பின்னரும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
உதவிய தோனி :
இருப்பினும் மொய்ன் அலி மீது நம்பிக்கை வைத்து அவரை சென்னை அணியில் விளையாட வைக்க அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மிகப்பெரிய ஆதரவை அளித்ததார். அவர் மீது நம்பிக்கை வைத்து பவர் பிளே ஓவர்களில் அவருக்கு பந்துவீச வாய்ப்பளித்ததுடன் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கும் வாய்ப்பு கொடுத்தார்.
சுரேஷ் ரெய்னா விளையாடும் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கியதுடன் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு சென்னையின் வெற்றிக்கு பலமுறை வித்திட்டார்.
தடுமாறிய தனக்கு தோனி எந்த அளவுக்கு உதவினார் என்பது பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் மொய்ன் அலி கூறுகையில்,
சிஎஸ்கே அணிக்காக விளையாடியது என்னுடைய தன்னம்பிக்கையை மிகவும் உயர்த்தி உள்ளது, அவர்கள் ஏலத்தில் எடுத்தது முதல் என் மீது அதிகமான நம்பிக்கை வைத்தார்கள் குறிப்பாக சென்னை அணியில் ஒரு முக்கிய வீரர் போல என்னை அவர்கள் நடத்தினார்கள். கடினமான நேரங்களில் அது போன்ற நம்பிக்கை தான் உங்களுக்கு தேவை.. இங்கிலாந்துக்காக விளையாடிய போது நான் பெரிய அளவில் பந்து வீசுவதில்லை பேட்டிங்கில் மட்டும் லோயர் ஆர்டரில் விளையாடுவேன் ஆனால் சென்னை அணிக்காக விளையாடியதன் வாயிலாக இங்கிலாந்துக்கு அதிகமாக பங்காற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே அணியில் எனக்கு கொடுக்கப்பட்ட ரோல் மிகவும் முக்கியமானது. பேட்டிங்கில் மேல் வரிசையில் விளையாட எம்எஸ் தோனி எனக்கு மிகவும் ஆதரவளித்தது மிகவும் சிறப்பானது. அது களத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நான் சிறப்பாக விளங்குவதாக எனக்கு உணர்த்தியது, தற்போது எனது கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.
என எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் தனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது என வெளிப்படையாகவே கூறினார்.
கைமேல் பலன்:
மொய்ன் அலி கூறியது போல இதற்கு முன்பு அவர் இங்கிலாந்துக்காக விளையாடிய போது அதிகமாக பந்து வீசுவதற்கு கேப்டன் இயான் மோர்கன் வாய்ப்பளிக்கவில்லை ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பந்துவீச்சில் கலக்கியதால் தற்போது நேரடியாகவே உலக கோப்பை பவர் பிளே ஓவர்களில் மொய்ன் அலிக்கு பந்துவீசும் வாய்ப்பை வழங்குகிறார்.
அவரும் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உள்ளார், அதேபோல் பேட்டிங்கிலும் இதற்கு முன்னர் 5, 6 இடங்களில் அவரை பயன்படுத்திய இங்கிலாந்து தற்போது 4வது இடத்தில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கிறது.
இதிலிருந்து அவரை ஒரு ஆல்-ரவுண்டராக இங்கிலாந்து பயன்படுத்துவது தெளிவாக தெரிகிறது, இதற்காக அவரும் எம்எஸ் தோனிக்கு வெளிப்படையாகவே நன்றியும் கூறியுள்ளார், எது எப்படியோ இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்கும் போது இதே மாதிரி மொயின் அலி விளையாடக் கூடாது என்பதே சென்னை அணி ரசிகர்களின் எண்ணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.