T20 World Cup : 18 ஆண்டுகளாக உலக கோப்பையில் நியூஸிலாந்தை தோற்கடிக்காமல் திணறும் இந்தியா, முற்றுப்புள்ளி வைக்குமா

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

Virat Kohli and Kane Williamson
Photo Credits : Getty Images

இதன் வாயிலாக 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியை பெற்று இந்தியா பெருத்து அவமானத்துக்கு உள்ளாகியது.

கட்டாய வெற்றி :

இந்த தோல்வியால் அடுத்த சுற்றான அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமெனில் எஞ்சி இருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா தனது 2-வது சூப்பர் 12 போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை அக்டோபர் 31 ஆம் தேதி துபாயில் சந்திக்க உள்ளது.

வலுவான நியூஸிலாந்து:

கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலைமையில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என எந்த ஒரு வகையான உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த 18 வருடங்களாக இந்தியாவால் நியூசிலாந்தை தோற்கடிக்க முடியவில்லை என்ற விஷயம் இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது.

ஆம் கடைசியாக கடந்த 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது. அதன் பின்னர் டி-20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த ஒரு வகையான உலக கோப்பையிலும் வீழ்த்த முடியாமல் திண்டாடி வருகிறது.

அதைப்பற்றி பார்ப்போம் வாங்க:

1. டி20 உலககோப்பை, 2007:

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் அந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஜோகானஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  • அந்த உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியுற்ற ஒரே போட்டி அதுவாகும்.

2. டி20 உலககோப்பை, 2016:

கடைசியாக இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விதர்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா மோசமான பேட்டிங் காரணமாக 18.1 ஓவர்களில் வெறும் 79 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

3. 50 ஓவர் உலககோப்பை, 2019:

இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Photo : Getty Images


இருப்பினும் இந்த 2 அணிகளும் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின, இதையடுத்து லண்டன் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக ரிசர்வே வரை சென்றது. அதில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

  • அந்த போட்டியில்தான் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து இந்தியாவை மீட்க போராடிய எம்எஸ் தோனி கடைசியாக இந்தியாவிற்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

4. டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2020:

கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா படு மோசமாக செயல்பட்டு 2 - 0 என வைட்வாஷ் தோல்வி பெற்றது, அதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் நியூசிலாந்திடம் இந்தியா பறிகொடுத்தது.

  • 2019 - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தோல்வி அடைந்த ஒரே தொடர் அதுவாகும், அத்துடன் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக அந்த தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

5. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2021:

இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐசிசி உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர் கொண்டது.

இந்த போட்டியும் மழையால் தடை பெற்று பின்னர் ரிசர்வ் டே வரை சென்ற போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து மீண்டும் ஒருமுறை நியூசிலாந்துடன் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது.

இப்படி கடந்த 2003 முதல் தற்போது வரை உலக கோப்பைகளில் நியூசிலாந்தை வீழ்த்த முடியாமல் தடுமாறி வரும் இந்தியா இந்த முறை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே இந்த போட்டியிலாவது நியூசிலாந்தை தோற்கடித்து 18 வருட தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction