T20 World Cup 2021 : அப்படி சொல்லி தப்பிக்காதீங்க விராட் கோலி, தோனி தான் இந்தியாவ காப்பாற்றணும் - கபில் தேவ் கருத்து

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற அடுத்தடுத்த 2 சூப்பர் 12 போட்டிகளில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தியாவின் முதல் போட்டிக்கும் 2வது போட்டிக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்த போதிலும் அது இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுக்கவில்லை.

Photo : Getty Images


இந்த 2 தொடர் மோசமான தோல்விகளால் இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு பறிபோகும் நிலையில் உள்ளது.

துணிச்சல் இல்லை :

நேற்றைய போட்டி மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை, இதன் காரணமாக உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா மண்ணைக் கவ்வியது.

அந்த போட்டியில் 1 விக்கெட் கூட எடுக்க முடியாத இந்தியா நேற்று 2 விக்கெட் மட்டும் எடுத்தது, குறிப்பாக நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நியூசிலாந்தின் அபார பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக தோல்வி உறுதி என கருதிய இந்திய வீரர்கள் பந்து வீசும்போது வெற்றிக்காக போராடவில்லை என்பது அவர்களின் பாடி லாங்குவேஜில் தெளிவாக தெரிந்தது.

துணிவு இல்லை:

இதை "வெற்றிக்காக போராடும் அளவுக்கு போதுமான பாடி லாங்குவேஜ் மற்றும் தைரியம் அணியிடம் இல்லை" என நேற்றைய போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி தோல்வியை ஒப்புக் கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என இந்தியாவின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இதுபற்றி ஏபிபி செய்தியில் அவர்,

விராட் கோலி போன்ற ஒரு மிகப்பெரிய வீரரிடம் இருந்து இது போன்ற கருத்து மிகவும் பலவீனமாக காட்சியளிக்கிறது, அவர் எப்போதுமே இந்தியாவிற்காக கடுமையாகப் போராடி வெற்றியை தேடி கொடுக்கக் கூடியவர் ஆனால் அணியில் உள்ள வீரர்களின் பாடி லாங்குவேஜ் மற்றும் இது போன்ற ஒரு கருத்தை கேப்டன் கொண்டுள்ளார் என்றால் அந்த அணியில் இருக்கும் மோசமான மனநிலையை உயர்த்துவது என்பது மிகவும் கடினமாகும்

என கூறிய கபில் தேவ் தற்போதைய நிலைமையில் இந்திய அணியை மனதளவில் உயர்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என தெரிவித்தார்.

தோனி, சாஸ்திரி காப்பாற்றணும்:

இது போன்ற மோசமான நிலையில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட எம்எஸ் தோனியின் பங்குபற்றி கபில்தேவ் பேசுகையில்,

"இது போன்ற மோசமான தருணத்தில் எனது நண்பன் ரவி சாஸ்திரி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் அணிக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இதுபோன்ற மோசமான வேளையில் அணியில் உள்ள வீரர்களிடம் நல்ல முறையில் பேசி உத்வேகத்தை அளிப்பது எம்எஸ் தோனியின் வேலையாகும்"

"மற்ற அணிகளின் செயல்பாடுகளை வைத்து நீங்கள் விளையாட முயன்றால் அது மிகவும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் உங்கள் கையை நம்பி வெற்றி பெறுங்கள், அடுத்தவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்ல யோசனை அல்ல"

என தெரிவித்த அவர் அரையிறுதிக்கு இந்தியா செல்வதற்காக ஆப்கானிஸ்தான் போன்ற எதிரணிகளின் கையை எதிர்பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

ஏமாற்றும் நட்சத்திரங்கள்:

விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் என நட்சத்திர வீரர்களை இந்திய அணி பெற்றுள்ள போதிலும் அடுத்தடுத்த படு மோசமான தோல்விகள் இந்திய ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கலக்கியது ருதுராஜ் கைக்வாட் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்திருக்கலாம் என ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகிறார்கள். விராட் போன்ற நட்சத்திர வீரர்கள் ரன்கள் குவிக்காமல் ஏமாற்றியது பற்றி கபில்தேவ் பேசுகையில்,

"இந்திய அணியில் இருக்கும் ஒரு சில பெரிய பெயர்களை இந்திய தேர்வுக் குழுவினர் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது மேலும் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களை தேர்வு செய்யலாமா என்பது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். எப்போதுமே பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படத் தவறினால் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்"

இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கு எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction