T20 World Cup 2021: ஜஸ்ட் ஒரு மோசமான மேட்ச், ரோபோக்கள் இல்லை - தடுமாறும் இந்தியாவுக்கு சச்சின், பீட்டர்சன் ஆதரவு

துபாயில் நடைபெற்றுவரும் ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் அதள பாதாளத்தில் உள்ளது.

Photo Credits : Getty Images


முன்னதாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர தோல்வியை சந்தித்த இந்தியா சென்ற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வி அடைந்தது.

சோர்வடைந்துள்ள வீரர்கள்:

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா டி20 உலக கோப்பையில் தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது, இந்த 2 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என எதுவுமே இந்திய வீரர்களுக்கு எடுபடாத காரணத்தால் அவர்கள் மனதளவில் உடைந்து போயுள்ளார்கள்.

இந்த தொடர் தோல்விகளால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில் ஐபிஎல் என்றால் மட்டும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் இந்தியாவிற்காக அதுவும் நாக் - அவுட் போன்ற பிரஷர் நிறைந்த போட்டிகளில் மட்டும் சொதப்புகிறார்கள் என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர் ஆதரவு:

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் இந்திய அணிக்கு முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்,

இது நமது அணிக்கு மிகவும் கடினமான நாட்களாகும், எவ்வளவுதான் முயற்சித்தாலும் எதுவுமே நல்லதாக நடக்காது என்பது போன்ற நாட்களில் இதுவும் ஒன்றாகும். இதைப் பற்றி உண்மையாக பேசுவதற்கு ஒன்றுமில்லை இனி வரும் போட்டிகளில் நமது அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன், நியூஸிலாந்தின் அதிரடியான ஆட்டம் இந்தியாவின் பேட்டர்களுக்கு சிங்கிள் கூட எடுக்க சவாலை அளித்தது, அதனால் பெரிய ஷாட்டுகள் அடிக்க போய் அவுட் ஆகி விட்டார்கள்

என கூறிய சச்சின் இந்தியாவிற்கு வெறும் ஒரு மோசமான போட்டி அமைந்தது என்றும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் எனவும் இந்தியாவிற்கு ஆதரவளித்தார், மேலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினார்.

  • அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்திய வீரர்கள் எளிதாக சிங்கிள் எடுத்து ரன்களைக் குவிக்க விடாமல் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமாக கேப்டன்ஷிப் செய்ததாகவும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்ததும் வேகப்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்து விக்கெட் எடுத்ததாகவும் கேன் வில்லியம்சன் கேப்டன்ஷிப் பற்றி சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாக பாராட்டினார்.

ரோபோக்கள் இல்லை:

இதேபோல் இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் இந்தியாவிற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

விளையாட்டில் ஒருவர் வெற்றி பெற்றால் ஒருவர் தோற்க வேண்டும், அதே சமயம் யாரும் தோற்பதற்காக களத்தில் இறங்கி விளையாட மாட்டார்கள். அதிலும் நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய கெளரவம் ஆகும் எனவே கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ரோபோக்கள் அல்ல என்பதால் அவர்களுக்கு எப்போதும் ஆதரவு தேவை

என கடந்த பல மாதங்களாக தொடர்ந்து கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து வரும் இந்திய வீரர்கள் வேண்டுமென்றே தோற்கவில்லை என கூறிய பீட்டர்சன் விராட் கோலி தலைமையிலான இந்தியாவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

ஹர்பஜன் சிங் ஆதரவு:

இதே போல இந்தியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,

நமது வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே நாம் விமர்சிக்கிறோம் என்பது நமக்கு தெரியும் இருப்பினும் இந்தியா தோற்கும் போது நம்மை விட அவர்கள் தான் மிகவும் பாதிப்படைவார்கள்

என இந்திய வீரர்களை விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் இந்திய ரசிகர்களிடம் ஹர்பஜன் சிங் கேட்டுக்கொண்டார்.

Previous Post Next Post

Your Reaction