எனது கிரிக்கெட் கேரியர் ஜொலிக்க எம்எஸ் தோனி முக்கியமானவர் - டுவைன் ப்ராவோ

வெஸ்ட்இண்டீஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலராக உலக சாதனை படைத்துள்ள இவர் 7000க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார்.

MS Dhoni | Dwayne Bravo


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது பிக் பேஷ் உட்பட உலகம் முழுவதிலும் நடைபெறும் அனைத்து பிரீமியர் லீக் டி20 தொடரில் இவர் தொடர்ந்து விளையாடி வருகிறார், குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக கடந்த பல வருடங்களாக விளையாடி வரும் இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.

மெகா ஏலம் 2022:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் வேளையிலும் 38 வயதை கடந்து உள்ளதால் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக பிராவோவை சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை, இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் வருகின்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது பற்றி இன்று அவர் அளித்த ஒரு பேட்டியில்,

என்னை சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை என்றாலும் நான் மெகா ஏலத்தில் 100% பங்கேற்பது உறுதி, இருப்பினும் அதில் எந்த அணியில் நான் தேர்வு செய்யப்படுவேன் எனத் தெரியவில்லை. அதேசமயம் சென்னை நிர்வாகம் என்னை தேர்வு செய்யுமா என்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை, என்னை யார் தேர்வு செய்கிறார்களோ அந்த அணிக்கு விளையாட உள்ளேன்

என ப்ராவோ தெரிவித்தார். 

நட்புக்கு மரியாதை:

அத்துடன் ஐபிஎல் அதிக வருடங்கள் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் கேப்டன் தோனியுடன் விளையாடிய அனுபவம் பற்றி ப்ராவோ,

நான் மற்றும் எம்எஸ் தோனி ஆகிய இருவருமே எங்களை மற்றொரு தாயின் சகோதரர்கள் என அழைத்துக் கொள்வது உங்கள் அனைவருக்குமே தெரியும், நாங்கள் எங்களின் விளையாட்டை முன்னேற்றி உள்ளோம். அவர் உலக கிரிக்கெட்டின் ஒரு அம்பாசிடர் ஆவார் அத்துடன் பர்சனலாக தோனி என்னுடைய கேரியரில் அதிக உதவிகளை செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நாங்கள் இருவருமே மிகப்பெரிய மரபை வைத்துள்ளோம், நாங்கள் இருவருமே ஐபிஎல் வரலாற்றில் சென்னையை ஒரு அதிரடியான வெற்றிகரமான அணியாக வரலாற்றுப் புத்தகத்தில் திகழ உதவிகள் செய்துள்ளோம். இவை அனைத்தையும் விட நான் மற்றும் தோனி இருவருமே நல்ல நண்பர்கள் ஆவோம்

என கூறிய பிராவோ இந்திய கேப்டன் எம் எஸ் தோனி தனது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய உதவிகளையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்தார், அத்துடன் வரும் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாடாமல் போனாலும் எப்போதுமே தோனி தனக்கு மிகவும் உயிரான நண்பர் எனவும் கூறி நட்புக்கு மரியாதை கொடுத்தார்.

புதிய ரூட்:

மேலும் வரலாற்று சிறப்புமிக்க ஒலிம்பிக் விளையாட்டில் 10 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர்களை சேர்க்க வேண்டும் எனவும் பிராவோ கூறினார், விரைவில் "சாம்பியன் டிஜே47" எனப்படும் பேஷன் ஆடைகளை அடிப்படையிலான கம்பெனியை கொண்ட வணிகத்தைத் அவர் தொடங்க உள்ளார்.

அதில் தனக்கு வாழ்வில் என்னற்ற அம்சங்களையும் அன்பையும் கொடுத்த இந்தியாவில் ஒரு கிளையை தொடங்க இருப்பதாகவும் கரீபியன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் இதர கிளைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறிய ப்ராவோ அதில் எம்எஸ் தோனியை கௌரவப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction