WTC Points Table : கான்பூர் ட்ரா எதிரொலி, குறைவான புள்ளிகள் ஆனாலும் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2021 - 23 கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது, இதில் இந்தியா தனது முதல் தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டது.

Photo Credits : BCCI


அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 - 1* என இந்தியா முன்னிலை பெற்ற வேளையில் அந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது, அந்த தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

நியூஸிலாந்தை வெற்றி:

அதை தொடர்ந்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தை இந்தியா தனது சொந்த மண்ணில் கடந்த வாரம் எதிர்கொண்டது, 2 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய மும்பையில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து 1 - 0 என தொடரை வென்றது.

புள்ளிப்பட்டியல்:

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அப்டேட் செய்யப்பட்ட புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என வைட்வாஷ் செய்து வெற்றி பெற்ற இலங்கை 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் முதலிடத்தில் உள்ளது.

இன்று வங்கதேசத்திற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றிய பாகிஸ்தான் இந்தியாவை முந்தி 36 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது ஆனால் 42 புள்ளிகளை பெற்ற போதிலும் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

காரணம்:

இதற்கு காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் புள்ளி பட்டியலில் அனைத்து அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் வகைப்படுத்த படாமல் அந்த அணிகள் பெற்றுள்ள வெற்றி புள்ளிகளின் சராசரி அடிப்படையில் வகைப்படுத்த பட்டு வருகின்றன.

அந்த வகையில் இதுவரை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட பெறாத இலங்கை 100% புள்ளிகளுடன் முதல் இடத்திலும் 4 போட்டிகளில் பங்கேற்று 3 வெற்றிகள் 1 தோல்வி உட்பட 75% புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் 2வது இடத்தை பிடித்துள்ளது.

  • மறுபுறம் இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா அதே 3 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பெற்ற போதிலும் 2 போட்டிகள் டிரா செய்ததன் காரணமாக 58.33% புள்ளிகளுடன் 3-வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

ஒருவேளை கான்பூர் டெஸ்டில் ஒரு விக்கெட் எடுக்க முடியாமல் கோட்டைவிட்ட வெற்றியை இந்தியா பெற்றிருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை முந்தி இருக்கலாம்.

Previous Post Next Post

Your Reaction