Vijay Hazare Trophy 2021 : மிரட்டிய ஷாருக்கான் - ஜெகதீசன், கர்நாடகாவை மீண்டும் சாய்த்த தமிழ்நாடு செமிபைனலுக்கு தகுதி

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று துவங்கிய இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை,  தமிழ்நாடு உட்பட 38 அணிகள் பங்கு பெற்றன.


இதில் மொத்தம் 5 ரவுண்டுகள் உள்ளடக்கிய லீக் சுற்றில் எலைட் குரூப் பி பிரிவில் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பெற்ற தமிழ்நாடு ரன்ரேட் அடிப்படையில் சற்று அதிர்ஷ்டத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

காலிறுதி சுற்று:

இதை தொடர்ந்து இந்த தொடரின் நாக் அவுட் சுற்றில் முதல் பகுதியான கால்இறுதி சுற்று   இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் துவங்கியது, மொத்தம் நடைபெறும் 4 காலிறுதிப் போட்டிகளில் இன்று 2 போட்டிகள் நடைபெற்றன.

இந்த காலிறுதிச் சுற்றின் 2வது காலிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின, ஜெய்ப்பூர் நகரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது இதையடுத்து களமிறங்கிய தமிழகத்திற்கு தொடக்க வீரராக களமிறங்கிய அபாரஜித் 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும் அடுத்து வந்த சாய் கிஷோருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் ரன்களை குவிக்க தொடங்கினார்.

ஜெகதீசன் சதம்:

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்து போது சாய் கிஷோர் 61 ரன்களில் ஆட்டம் இழந்தார், அடுத்து வந்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 37 பந்துகளில் 44 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார்.

  • ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ஜெகதீசன் 101 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட சதம் அடித்து 102 ரன்கள் விளாசி முக்கிய வேளையில் அவுட்டானார்.

மிரட்டிய ஷாருக்கான்:

பின் களமிறங்கிய இந்திரஜித் 24 பந்துகளில் 31 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 3 ரன்களிலும் எடுத்து அவுட் ஆனதால் 40 ஓவர்களில் 252/5 என சுமாரான நிலையில் தமிழ்நாடு இருந்தது, அப்போது அதிரடியாக பேட்டிங் செய்த இளம் வீரர் சாருக்கான் கர்நாடக பந்துவீச்சாளர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

  • கடைசி 10 ஓவர்களில் பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் வெறும் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 இமாலய சிக்சர்களை பறக்க விட்டு 79 ரன்களை 202.56 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார், இவர் ஏற்கனவே சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை பைனலில் இதே கர்நாடகாவுக்கு எதிராக கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழகத்தை சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த தமிழ்நாடு 354 என்ற மிகப்பெரிய ரன்களை குவித்தது.

தமிழ்நாடு வெற்றி:

இதை தொடர்ந்து 355 என்ற மெகா இலக்கை துரத்திய கர்நாடகா வீரர்களை ஆரம்பம் முதலே தமிழக பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர், குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் தேவுட் படிக்கல் 0 ரன்களிலும் கேப்டன் மனிஷ் பாண்டே 9 ரன்களிலும் அவுட் ஆக இதர வீரர்களும் பெரிய ஸ்கோர் அடிக்க தவறியதால் அந்த அணி 39 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • அதிக பட்சமாக ஸ்ரீநிவாஸ் சரத் 43 ரன்கள் எடுத்தார், தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆர் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் சந்திப் வாரியர், சாய் கிசோர், சித்தார்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதன் காரணமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகத்தை வீழ்த்தி மெகா வெற்றியை பதிவு செய்த தமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது, சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியிலும் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழகம் கோப்பையை வென்றது, அதேபோல மீண்டும் இந்த தொடரிலும் அந்த அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.

அரைஇறுதி:

இதை அடுத்து நாளை நடைபெற உள்ள எஞ்சிய 2 காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் ஒரு அணியுடன் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு பலப்பரிட்சை நடத்த உள்ளது.

  • இதில் வெற்றி பெரும் பட்சத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் இந்த கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு தகுதி பெறும். 

Previous Post Next Post

Your Reaction