தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றைய தேதியில் ஐசிசி தரவரிசையின் டாப் 10 வீரர்களில் 9 பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க ரவிசந்திரன் அஸ்வின் மட்டும் தனி ஒரு சுழல் பந்து வீச்சாளராக இருப்பதே அவரின் திறமைக்கு சான்றாகும்.
Photo Credits : Getty Images |
ஏற்கனவே 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே, கபில்தேவ் போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளார்.
ஓரங்கட்டபடும் அஷ்வின்:
இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இன்றைய தேதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லையன் ஆகிய இருவர் மட்டுமே தரமான சுழல்பந்து வீச்சாளர்கள் என்று கூறலாம், கடந்த 10 வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருதுகளை (7) வென்ற இந்தியர் என்ற சரித்திரத்தை அஸ்வின் படைத்துள்ளார்.
- ஆனாலும் கூட இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தரமான இடம் இதுவரை கிடைக்கவில்லை, குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என இந்திய அணி நிர்வாகம் அவ்வப்போது ஒதுக்கி வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட இவர் தேர்வு செய்யப்படவில்லை, இத்தனைக்கும் 2021 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அப்போது நம்பர்-1 பேட்ஸ்மேனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் செய்ததை கேப்டன் விராட் கோலி மறந்துவிட்டார் போல.
டி20 கம் பேக்:
தோனியால் வளர்க்கப்பட்ட இவர் அவர் கேப்டனாக ஒதுங்கிய 2017 க்குப் பின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து சுத்தமாக கழற்றி விடப்பட்டார், இருப்பினும் இதற்கெல்லாம் அசராத அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் 4 வருடங்கள் கழித்து இடம் பிடித்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
- மொத்தத்தில் சோதனைகள் எத்தனை வந்தாலும் அதை முறியடித்து கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்றால் மிகையாகாது.
அஷ்வின் வேதனை:
இந்த நிலையில் பிரபல "இஎஸ்பிஎன்கிரிக்இன்போ" இணையத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக கடந்த 2018-19 ஆகிய காலகட்டத்தில் குல்தீப் யாதவ் வருகையால் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் கழட்டி விடப்படுவதாக உணர்ந்ததை வேதனையுடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
ரவி சாஸ்திரி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது, நாங்கள் பலவற்றை பேசுவோம் பின்னர் அதை புரிந்து கொண்டு அதை திரும்பப் பெற்றுக் கொள்வோம் ஆனால் அந்த ஒரு தருணம் என்னை மிகவும் உடைத்தது, நாம் அனைவரும் நமது சக வீரரின் வெற்றியை மகிழ்ச்சியுடன் பாராட்டுவதை பற்றி பேசுவோம், அந்தவகையில் குல்தீப் யாதவ் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. அவர் ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் ஹால் எடுத்தார் என்னால் எடுக்க முடியவில்லை, அது எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும், அங்கு நான் சிறப்பாக பந்து வீசிய போதும் என்னால் 5 விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை என்பதால் குல்தீப் யாதவ் பற்றி மனதார எனக்கு மகிழ்ச்சியே, அத்துடன் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றது மிகச் சிறந்த தருணமாகும்.
ஆனால் அவர் மற்றும் அணியின் வெற்றியில் நான் பங்கு கொள்ளும் போது நானும் அதில் ஒருவனாக இருக்கிறேன் என உணர வேண்டும்,இருப்பினும் ஓடும் பேருந்துக்கு கீழே என்னை தூக்கி எறிவது போல் நான் உணர்ந்தால் எப்படி அணியின் வெற்றி அல்லது சக வீரரின் வெற்றியை என்னால் கொண்டாட முடியும்
என ரவிச்சந்திரன் அஸ்வின் வேதனையுடன் தெரிவித்தார். அவர் கூறும் இந்த நிகழ்வு கடந்த 2018/19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் நடைபெற்றதாகும். அப்போது 70 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது, அதில் சிட்னி நகரில் நடந்த 3வது போட்டியின் ஒரு இன்னிங்ஸ்ஸில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
உதாசீனம்:
இது பற்றி மேலும் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்,
அந்த தருணத்தில் எனது அறைக்கு சென்று எனது மனைவி குழந்தைகளுடன் மனம்விட்டு பேசி அந்த வேதனையை சரி செய்து கொண்டு இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கு கொண்டேன் ஏனெனில் அந்த நாளின் இறுதியில் நாங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருந்தோம்.
அத்தொடரின் முதல் போட்டி எனது நினைவுக்கு மிக தொலைவில் சென்றுவிட்டது, அதில் முதல் இன்னிங்சில் மிகக் குறைவான ரன்களுக்கு அவுட் ஆன பின் நாங்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் முதல் 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் நான் எடுத்திருந்தேன், 2வது இன்னிங்ஸ்சிலும் பிளாட்டன அந்த பிட்சில் 50க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசி கிரேட் 3 வயிற்று வலியுடன் 3 விக்கெட்கள் எடுத்தேன்.
அப்போது வலியுடன் சிறப்பாக பந்துவீசி நான் எனது அணியின் வெற்றிக்கு பங்காற்றினேன் என மகிழ்ந்தேன் ஆனால் அதன் பலனாக "நேதன் லையன் 6 விக்கெட்டுகள் எடுத்தார் ஆனால் அஸ்வின் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்" என்பது போன்ற பேச்சுகளையே கூற கேட்டேன். அது நான் சிறப்பாக பந்துவீசி நல்ல பார்மில் இருந்த போதிலும் எனது உடலை பலவீனமடைய செய்தது, இறுதியில் இதுபோன்ற ஒப்பீடுகள் மற்றும் உட்குறிப்புகள் எனக்கு தேவையானதாக இருந்தது, அத்துடன் முதல் டெஸ்ட் முதல் சிட்னி டெஸ்ட் வரை நான் அணியில் பங்கெடுத்ததாக எனக்கு தோன்றவில்லை
என கூறிய அவர் வலியுடன் பந்துவீசி தம்மால் முடிந்தளவு விக்கெட்டுகளை எடுத்த போதிலும் அதற்காக தன்னை பாராட்டாத அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிட்டது மிகுந்த மனவேதனையை அளித்ததாக தெரிவித்தார்.
ஓய்வு பெற எண்ணம்:
இதன் காரணமாக 2018 காலகட்டத்தில் ஓய்வு பெறுவதாக ஒரு எண்ணத்தில் இருந்ததைப் பற்றி அஸ்வின் மேலும் தெரிவிக்கையில்,
2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் "நான் முழு மூச்சுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் ஆனால் எதுவும் சரியாக வரவில்லை" என்ற எண்ணத்தால் பல்வேறு நேரங்களில் ஓய்வுபெற சிந்தித்தேன், "எவ்வளவு கடினமாக முயற்சித்தேனோ அவ்வளவு தொலைவில் சென்று விழுந்தேன்" மேலும் அந்த சமயத்தில் இருந்த காயத்தால் 6 பந்துகள் வீசியதும் எனது உடல் முழுக்க வலியை உணர்ந்தேன்
என கூறினார். இந்த தருணங்கள் அனைத்தும் கேப்டன் விராட் கோலி மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலைமையின் கீழ் அஸ்வின் விளையாடியபோது நடந்ததாகும், இருப்பினும் அவர்கள் மீது இருக்கும் மரியாதை காரணமாக அவர்களின் பெயரை இந்த பேட்டியின்போது அஷ்வின் நேரடியாக குறிப்பிடவில்லை.
குல்தீப் எங்கே:
ஒரு சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக குல்தீப் யாதவை உயர்வாக நினைத்த இந்திய அணி நிர்வாகம் 2011 முதல் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினை இன்னும் கூட நம்பாமல் இருப்பதாலேயே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு தர யோசிக்கிறது.
- அத்துடன் அவரை விட உயர்வாக பேசிய குல்தீப் யாதவ் இன்று இந்திய அணியில் இடம் பிடிக்கவே தடுமாறுவது வருகிறார்.
எது எப்படியோ 2017 க்கு பின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து கழட்டி விட்டது போல 2018ல் டெஸ்ட் அணியில் இருந்தும் அஸ்வினை கழட்டிவிட இந்திய அணி நிர்வாகம் முயற்சித்தது இதிலிருந்து தெளிவாக தெரியவருகிறது ஆனால் வழக்கம் போல தடைகளை உடைத்து மீண்டும் இந்திய அணியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஆசையாகும்.