IND vs SA : இப்போ இல்லைனா எப்போ, தென்ஆப்பிரிக்காவில் இந்தியா சரித்திரம் படைக்க ஏற்பட்டுள்ள பொன்னான வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, வரும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது.

Photo Credits : Getty Images


கடந்த 1992 முதல் வரலாற்றில் இதுவரை 7 ஏழு முறை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வெற்றி பெற முடியவில்லை, அந்த அளவுக்கு தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இந்தியாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

வலுவான தென்ஆப்பிரிக்கா:

  • தென்ஆப்பிரிக்காவில் இதுவரை 20 போட்டிகளில் களமிறங்கிய இந்தியா 10 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது,7 போட்டிகளில் போராடி டிரா செய்தது. 2006, 2010, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

பொதுவாக சேனா நாடுகள் எனப்படும் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் இந்தியா வெற்றி பெறுவது என்பது எப்போதாவது நிகழக் கூடிய அரிய நிகழ்வாகவே இருந்து வருகிறது.

வெற்றி சரித்திரம்:

அந்த வகையில் கடந்த 1967 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு மேற்கொண்ட முதல் சுற்று பயணத்திலேயே அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, பின்னர் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.

இருப்பினும் வலுவான ஆஸ்திரேலியாவை 70 ஆண்டுகளாக தோற்கடிக்க முடியாமல் திணறி வந்த இந்தியா ஒரு வழியாக கடந்து 2019ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

தென்ஆப்பிரிக்காவில் வெற்றிக்கொடி:

இருப்பினும் இந்த தென்னாப்பிரிக்க நாட்டில் மட்டும் இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி வருகிறது. இத்தனைக்கும் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், ஜஹீர் கான், அனில் கும்ப்ளே என எத்தனையோ ஜாம்பவான்கள் அடங்கிய இந்திய அணியால் கூட தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த முடியவில்லை.

ஆனாலும் இந்த முறை அந்த நாட்டில் இந்தியாவின் வெற்றிக்கொடி பறக்கும் எனக் கூற ஒரு சில காரணங்கள் பற்றி பார்ப்போம்:

1. வேகபந்து வீச்சு:

தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் அளவுக்கு வேகப்பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை விட இந்தியாவின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

  • சொல்லப்போனால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார்,  முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தான் துவங்கியது, அது வெறும் ஆரம்ப கட்டமாக இருந்ததால் அந்த தொடரை 2 - 1 என இந்தியா தோற்றது.

ஆனால் அதன்பின் கடந்த 2018/19 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து 2 - 1 என இந்தியா சரித்திர வெற்றியை பதிவு செய்தது, அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த வருடமே மீண்டும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2-வது முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

தொடர் வெற்றிகள்:

  • இது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2019இல் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இந்தியா 2 - 1* என முன்னிலையில் ஜொலிக்கிறது.

மேற்கூறிய இந்த சுற்றுப் பயணங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்ததாலேயே இந்த அடுத்தடுத்த சரித்திர வெற்றிகளை இந்தியாவால் பெற முடிந்தது.

  • தற்போது முகமத் சிராஜ் வருகையால் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது என்றே கூறலாம், மேலும் இதற்கு முன் 2006, 2010 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பெற்ற வெற்றிகளில் கூட ஸ்ரீசாந்த், ஜாஹீர் கான், ஜஸ்பிரித் பும்ரா என வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தான் வெற்றியை பதிவு செய்ய முடிகிறது.

இந்த முந்தைய சுற்றுப் பயணங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லையா என நீங்கள் கேட்கலாம் ஆனால் அப்போதெல்லாம் 1 அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்தனர் ஆனால் தற்போது அணியில் இருக்கும் அனைவருமே எதிரணி பேட்டர்களை திணறடித்து வெற்றிகளைத் தேடித் தர கூடியவர்களாக இருக்கிறார்கள்.

  • இத்துடன் கடந்த 2018 க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை புரட்டினால் இந்தியாதான் முதலிடத்தில் வருகிறது.

2. வலுவில்லா தென்ஆப்பிரிக்கா:

இதற்கு முந்தைய சுற்றுப் பயணங்களில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்காவில் கிரேம் ஸ்மித், ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட், ஜேக் காலிஸ், ஏபி டீ வில்லியர்ஸ், பாப் டு பிளேஸிஸ், டேல் ஸ்டைன், மோர்கல் என ஏகப்பட்ட அதிக பலம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர் ஆனால் இம்முறை அந்த அணியில் அது போன்ற தரமான வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

  • குறிப்பாக பேட்டிங்கில் அந்த அணி சற்று பலவீனமாக உள்ளது, பந்துவீச்சில் கூட அன்றிச் நோர்ட்ஜெ காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது இந்தியாவிற்கு சாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் சொந்த மண்ணில் எலியும் புலியாகும் என்பதுபோல் தென்னாப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் குறைத்து எடை போட மாட்டார்கள் என நம்பலாம், மொத்தத்தில் இந்தியாவின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் விராட் கோலி, புஜாரா போன்ற பார்ம் இல்லாமல் தவிக்கும் அனுபவ இந்திய பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து ரன்கள் குவித்தாலே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் வெற்றி கொடி முதல் முறையாக பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Post Next Post

Your Reaction