IND vs SA : தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் சதம் விளாசிய இந்திய வீரர்களில் பட்டியல்

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, வரும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த இத்தொடரை வென்று முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க இந்திய அணியினர் தீவிரமாகப் போராட தயாராகி வருகின்றனர்.


தென்ஆப்பிரிக்காவில் சதம் அடிப்பது என்பது இந்தியர்களுக்கு எப்போதுமே சவாலான ஒன்றாகும் ஏனெனில் அங்கு இயற்கையாகவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக திகழ கூடிய மைதானங்களில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள்.

சதங்கள்:

அந்த வகையில் வரலாற்றில் ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட், டேல் ஸ்டைன், நிடினி, மோர்கல் என பெயரைக் கேட்டாலே அதிர கூடிய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சமாளித்து அங்கு சதமடித்த இந்திய வீரர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

1. பர்வின் ஆம்ரே, 1992:

கடந்த 1992 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் சுற்றுப் பயணத்தில் டர்பன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முன்னாள் வீரர் பர்வின் ஆம்ரே சதமடித்து 102 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2. சச்சின் டெண்டுல்கர், 1992 - 2010:

ஜாம்பவான் சச்சின் இல்லாத சாதனை பட்டியலா என்பது போல் கடந்த 1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியாவின் முதல் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திலேயே இளம் வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் முதல் சதம் அடித்து அசத்தினார்.

  • ஜொஹானஸ்பேர்க் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய அவர் 111 ரன்கள் குவித்தார்.

இது மட்டுமல்லாமல் 1997ம் ஆண்டு கேப் டவுன் மைதானத்தில் சதம் விளாசி 169 ரன்களை விளாசிய அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து இந்தியராக சாதனை படைத்தார்.

  • பின்னர் 2001 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது ப்ளூம்போய்ட்டன் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் சதமடித்து 155 ரன்களை விளாசினார். 

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு சென்சூரியன் மைதானத்தில் நடந்த போட்டியில் சதம் அடித்து 111* ரன்கள் விளாசிய சச்சின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார், அதே சுற்றுப் பயணத்தில் கேப் டவுன் நகரில் நடந்த அடுத்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் சதமடித்து 146 ரன்கள் குவித்து தனது கடைசி டெஸ்ட் சதமான 51-வது சதத்தை அடித்தார்.

  • மொத்தத்தில் 5 சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

3. கபில் தேவ், 1992:

1992 தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான் கபில்தேவ் 129 ரன்கள் குவித்து அசத்தினார்.

4. முகமத் அசாருதீன், 1997:

கடந்த 1997ஆம் ஆண்டு கேப் டவுன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் கேப்டன் அசாருதீன் வெறும் 110 பந்துகளில் 115 ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்காவில் அதிவேக சதம் அடித்த இந்தியராக அசத்தினார்.

5. ராகுல் டிராவிட், 1997:

இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கடந்த 1997 ஆண்டு ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் 148 ரன்கள் அடித்து சதத்தை பதிவு செய்தார்.

6. விரேந்தர் சேவாக்:

இந்தியாவின் அதிரடி வீரர் சேவாக் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை கடந்த 2001 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ப்ளூம்போயின்டன் மைதானத்தில் துவங்கினார், தனது அறிமுக போட்டியிலேயே தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை பந்தாடிய அவர் சதமடித்து 105 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

7. வாசிம் ஜாபர், 2007:

தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ் வாயிலாக பட்டைய கிளப்பி வரும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாபர் கடந்த 2007 ஆம் ஆண்டு கேப் டவுன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்து 116 ரன்கள் குவித்து அசத்தினார்.

8. செடேஸ்வர் புஜாரா, 2013:

தற்போதைய இந்திய அணியில் பொறுமையாக விளையாடி எதிரணியின் பவுலர்களை சோதிக்க கூடியவராக இருக்கும் புஜாரா கடந்த 2013ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 153 ரன்கள் குவித்தார்.

9. விராட் கோலி, 2013 - 2018:

  • புஜாரா சதம் அடித்த அதே போட்டியில் தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் சதமடித்து 119 ரன்கள் குவித்தார், இருப்பினும் அந்த போட்டி டிராவில் முடிந்தது.

அதன் பின்னர் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இந்தியா விளையாடிய போது செஞ்சூரியன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி 153 ரன்கள் குவித்தார், இருப்பினும் அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

  • இதன் வாயிலாக சச்சினுக்கு பின் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Previous Post Next Post

Your Reaction