IPL 2022 Mega Auction Date : கடைசியாக முறையாக - 2 நாட்கள் நடக்கும் மெகா ஏல தேதி அறிவிப்பு

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளை மையப்படுத்திய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது, இதையடுத்து 10 அணிகள் பங்குபெறும் ஐபிஎல் 2022 தொடர் 74 போட்டிகளுடன் பிரம்மாண்டமாக அடுத்த வருடம் நடைபெற உள்ளது.

Photo Credits : BCCI/IPL


இதன் காரணமாக சிறிய அளவில் அல்லாமல் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா அளவில் விரைவில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

மெகா ஏல தேதி:

அதே போல மெகா காலத்திற்கு முன்பாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள பிசிசிஐ முன்னுரிமை அளித்துள்ளது, இதையடுத்து இந்த 2 அணிகளும் தேர்வு செய்யும் வீரர்கள் பற்றிய விவரங்கள் வரும் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது, மெகா ஏலம் என்பதால் இந்த முறை 2 நாட்கள் இந்த ஏலம் நடை பெற உள்ளது.

பிப்ரவரியில் ஏலம்:

இந்த அறிவிப்பின்படி ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது, முதலில் இந்த ஏலம் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுவதாக இருந்தது ஆனால் தற்போது இந்தியாவிலேயே இந்த ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இது பற்றி பிடிஐ இணைய பக்கத்தில் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில்,

இந்த முறை ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது, வழக்கம்போல இந்த வருடமும் இந்த ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது, இதற்காக அனைத்து வேலைகளையும் தயார் செய்து வருகிறோம்

என கூறினார். இந்த ஏலம் வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தன ஆனால் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகளில் அகமதாபாத் அணியை வாங்கி இருக்கும் சிவிசி நிறுவனம் ஒரு சில விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  • அதை பற்றி முழுமையாக விசாரித்து அனுமதி அளிக்கும் முடிவை எடுக்க தேவையான கால அவகாசம் தேவைப்படுவதால் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை பிப்ரவரிக்கு பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது.

கடைசி முறையாக:

இது மட்டுமல்லாமல் இதுதான் ஐபிஎல் தொடரில் நடக்க இருக்கும் கடைசி மெகா ஏலம் எனவும் தெரியவருகிறது ஏனென்றால் ஒவ்வொரு 3 வருடத்திற்கு ஒரு முறை மெகா ஏலத்தை நடத்துவதால் தங்கள் அணி 90% கலைக்கப்பட்டு விடுகிறது எனவும் அதனால் சிறந்த அணியை மீண்டும் உருவாக்க முடியாமல் போகிறது எனவும் என ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் அணிகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறிப்பாக ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா போன்ற வீரர்களை தக்க வைக்க விரும்பியதாகவும் ஆனால் ஐபிஎல் விதிமுறை காரணமாக அதை செய்ய முடியவில்லை எனவும் இளம் வீரர்களை வளர்க்க முடியாமல் போகிறது எனவும் டெல்லி கேப்பிடல் அணி உரிமையாளர் பர்த் ஜிண்டால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

  • இதன் காரணமாக வரும் காலங்களில் மெகா ஏலம் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், இருப்பினும் வழக்கம்போல மினி ஏலம் நடைபெறும்.

Previous Post Next Post

Your Reaction