கிரேக் சேப்பலிடம் பட்டதை மனதில் வைத்து கோலிக்கு உதவியிருக்கலாம் - கங்குலி பற்றி முன்னாள் வீரர் கருத்து

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை கடந்த வாரம் அதிரடியாக நீக்கிய பிசிசிஐ அவருக்கு பதில் ரோகித் சர்மாவை புதிய ஒருநாள் கேப்டனாக நியமித்து உத்தரவிட்டது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.


அதை தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கும் - விராட் கோலிக்கும் சண்டை உள்ளிட்ட பல வதந்திகள் காற்றில் பறந்தன ஆனால் அவை அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணத்திற்கு புறப்படும் முன்பாக நேரடியாக பதிலளித்த விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

கங்குலி - கோலி:

அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார், அதற்கு "தன்னை யாரும் தொடர்பு கொண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாமென கூறவில்லை" என விராட் கோலி தெரிவித்தார்.

அத்துடன் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவது பற்றி வெறும் ஒன்றரை மணி நேரம் முன்பாகவே இந்திய தேர்வு குழுவினர் தெரிவித்ததாகவும் கூறினார், இதன் வாயிலாக பிசிசிஐக்கும் - விராட் கோலிக்கும் இடையேயான தொடர்பு சரிவர அமையாதது வெளி உலகிற்கு தெரிய வந்தது.

  • பின் விராட் கோலியின் இந்த கருத்துக்களுக்கு பதில் எதுவும் கூறுவதற்கு இல்லை என தெரிவித்த சௌரவ் கங்குலி இந்த விஷயத்தை நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என அடுத்த ஒரு சில நாட்களில் கூறி இந்த சலசலப்புகளுக்கு பதில் அளித்து முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

ஓயாத பேச்சு:

இருப்பினும் விராட் கோலி மற்றும் சௌரவ் கங்குலி கூறிய கருத்துக்கள் பற்றி இந்தியாவின் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதே விஷயம் பற்றி நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் தேர்வு குழு உறுப்பினர் க்ரிதி ஆசாத் பேசுகையில்,

இதேபோல் பிஷன் பேடி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையும் சுனில் கவாஸ்கர் பதவியில் இருந்து நீக்க பட்டதையும் இன்னும் நான் நினைவு வைத்துள்ளேன், அதேபோல் வெங்கட்ராகவன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் தரையிறங்கியதும் அவர் கேப்டனாக மாற்றப்பட்டார். குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் சௌரவ் கங்குலி தாம் பட்ட அனுபவங்களில் இருந்தாவது புரிந்திருக்க வேண்டும்

என தெரிவித்த அவர் விராட் கோலி போல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல ஜாம்பவான்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள் என கூறினார்.

கிரேக் சேப்பல் - சௌரவ் கங்குலி:

கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது சவுரவ் கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார்கள், அப்போது நான் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்தது இன்னும் என் நினைவில் உள்ளது, எனவே அந்த மோசமான அனுபவம் பற்றி தெரிந்து இருந்த கங்குலி முன்கூட்டியே இதுபற்றி விராட் கோலியிடம் பேசியிருக்க வேண்டும். அதற்காக விராட் கோலி விஷயம் ஸ்பெஷலானது என நான் கூறவில்லை, இருப்பினும் விராட் கோலி ஒரு ஸ்பெஷலானவர் ஏனெனில் அவர் அணியை முன்னின்று வழி நடத்தினார்.

என இது பற்றி மேலும் பேசிய ஆசாத் கிரேக் சேப்பல் இருந்தபோது தனது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என தெரிந்த கங்குலி விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவது பற்றி பேசி இருக்க வேண்டும் என கூறினார்.

முறையான வழி அல்ல:

கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கு உண்மையான இந்திய ரசிகர்கள் அல்லது ஜாம்பவான்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் இந்தியாவிற்காக முழுமூச்சுடன் தலைமை தாங்கிய அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய விதம்தான் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதாவது விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் என வெறும் ஒற்றை வரியில் அதுவும் சமூக வலைதளப் பக்கத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. இது பற்றி கீர்த்தி ஆசாத் மேலும் பேசுகையில்,

இந்த விஷயத்தை பிசிசிஐ இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும், பிசிசிஐ நிர்வாகத்தில் கங்குலி போன்ற ஒருவர் இருக்கும் வேளையில் 2 முக்கிய வீரர்களுக்கு இடையே சண்டை என இந்திய முன்னாள் கேப்டன் ட்வீட் செய்த போதே அவர் களத்தில் இறங்கி இந்த விஷயத்தை கையாண்டிருக்க வேண்டும் ஏனெனில் இது போன்ற விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிய கூடாது, மேலும் இந்தியாவிற்காக நிறைய செய்துள்ள விராட் கோலியிடம் கேப்டன் பதவி பற்றி முன்கூட்டியே தெரிவிக்க பட்டிருக்க வேண்டும்.

என கூறினார். ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த நாளில் ரோகித் சர்மா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார், இதை மையப்படுத்தி இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இருவருக்கும் இடையே சண்டையா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார், அதைத்தான் க்ரிதி அசாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction