IND vs SA : தென்ஆப்பிரிக்காவில் கபில் தேவ் சாதனையை உடைக்க போகும் சாதனை நாயகன் அஷ்வின்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடர் இந்தியாவிற்கு மிகுந்த சவாலான தொடராக கருதப்படுகிறது.

Photo Credits : Getty Images


இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ரவிச்சந்திரன் அஷ்வின்:

இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது ஏனெனில் ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி இவருக்கு பெரிய ஆதரவு தருவதில்லை.

  • கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கூட உலகமே அஸ்வின் விளையாட வேண்டும் எனக் கூறி வந்த வேளையில் விராட் கோலி அவரை ஒரு போட்டியில் கூட சேர்க்கவில்லை.

உறுதியான வாய்ப்பு:

இருப்பினும் மற்றொரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

இருப்பினும் ஜெயந் யாதவை விட ரவிச்சந்திரன் அஸ்வின் ஏகப்பட்ட அனுபவத்தையும் லோயர் மிடில் ஆர்டரில் கணிசமான ரன்கள் அடிக்க கூடியவராகவும் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என 100% நம்பலாம்.

சாதனை நாயகன்:

2011 முதல் கடந்த 10 வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை வெறும் 81 போட்டிகளிலேயே 427 விக்கெட்டுகள் சாய்த்து உள்ளார், சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இது வரை 9 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2வது வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் ஜேக் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங்கை முந்தி புதிய சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள்:

  1. அனில் கும்ப்ளே : 617
  2. கபில் தேவ் : 434
  3. ரவிச்சந்திரன் அஷ்வின் : 427*
  4. ஹர்பஜன் சிங் : 417

கபில் தேவ் சாதனை:

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு உறுதியாகி உள்ளதால் அடுத்ததாக ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

  • அதாவது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இன்னும் 8 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனையை அஸ்வின் படைப்பார்.

சுழற்றுவாரா:

ஆசியாவுக்கு வெளியே அஸ்வின் சரிப்பட்டு வரமாட்டார் என கடந்த சில வருடங்களாகவே விராட் கோலி அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார் இருப்பினும் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போன்ற போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • அதேபோல் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் சிறப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல கண்டிப்பாக உதவுவார் என நம்பலாம்.

Previous Post Next Post

Your Reaction