தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 - 23 கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்த தொடரானது இந்தியாவிற்கு மிகவும் சவாலை அளிக்கக்கூடிய ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.
Photo Credits : Getty Images |
தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது, எனவே இம்முறை சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று சரித்திரம் படைக்க இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர்.
மோசமான பேட்டிங்:
தென்ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு வேகப்பந்து வீச்சு மிகவும் தரமானதாக இருக்க வேண்டும், அந்த வகையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதுடன் தற்போது நல்ல பார்மில் உள்ளது, அதேபோல் சுழல் பந்து வீச்சிலும் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலு சேர்ப்பார் என நம்பலாம்.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் தான் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளிக்கிறது, குறிப்பாக கேப்டன் விராட் கோலி அனுபவ வீரர் புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கடந்த 2 வருடங்களாக பார்ம் இன்றி திண்டாடி வருகிறார்கள்.
- அத்துடன் நல்ல பார்மில் இருந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் விலகியது இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவை கொடுத்துள்ளது.
சவாலான தென்ஆப்பிரிக்கா:
இப்போது மட்டுமல்ல காலம் காலமாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய பேட்டிங் வீரர்கள் ரன்கள் குவிக்க தடுமாறுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது ஏனெனில் இந்தியாவில் பேட்டிங் செய்ய பழகிய அவர்கள் தென்னாப்பிரிக்க மைதானங்களில் இயற்கையாகவே கிடைக்கும் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.
- ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை வெறும் 9 இந்திய வீரர்கள் மட்டுமே சதங்கள் அடித்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சச்சின் ஆலோசனை:
இந்நிலையில் தென்னாபிரிக்காவில் வரப்போகும் சவாலை சமாளிக்க ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு ஒரு சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி கிரிக்கெட் வல்லுனர் போரியா மஜூம்தர் உடன் நிகழ்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர்,
முன்கால் டிபன்ஸ் மிகவும் முக்கியமானது என எப்போதும் நான் கூறுவேன், முன் பகுதியில் முன்னங்காலை அடிப்படையாகக்கொண்ட டிபன்ஸ் மிகவும் முக்கியம் மேலும் அதை கணக்கில் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும், குறிப்பாக முதல் 25 ஓவர்களில் பிரண்ட் புட் டிபன்ஸ் மிக மிக முக்கியமானதாகும்.
இதை பின்பற்றியதாலேயே இங்கிலாந்தில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ரன்கள் குவித்தனர், அது போன்ற வேளைகளில் பந்து பேட்டில் பட்டு அவுட் ஆனால் அது பரவாயில்லை. எல்லா பேட்டர்களும் கண்டிப்பாக அவுட் ஆவார்கள் மேலும் விக்கெட்டுகளை எடுக்க தானே பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் உங்களது கைகள் உங்களது உடம்புக்கு வெளியே செல்லும் பொழுது பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி அவுட் ஆகி விடுவீர்கள்.
என தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்காவில் ரன்களை குவிக்க முதல் 25 ஓவர்களில் நிதானத்துடன் விளையாடுவதுடன் முன்னங்கால் தடுப்பாட்டம் மிகவும் முக்கியம் என தெரிவித்தார், அத்துடன் உடம்பிற்கு வெளியே சென்று விளையாட நினைக்கும் போது அவுட்டாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக சதங்கள் (5 சதங்கள்) விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார் என்பது இந்த தருணத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஜோடி வெற்றிகரமாக ரன்கள் குவிக்க உடம்பிற்கு அருகே விளையாடும் யுக்தி (கிளோஸ் டு தி பாடி) தான் உதவியதாகவும் அதையே இந்திய வீரர்கள் அனைவரும் இந்த சுற்றுப்பயணத்தில் பின்பற்ற வேண்டும் எனவும் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டார்.