இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரானது இந்திய வீரர்களுக்கு ஒரு சவால் மிகுந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Photo Credits : Getty Images |
கடந்த 2018 முதல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்தியா இந்த முறை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லுமா என்ற ஏக்கத்துடன் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
விராட் கோலி:
சச்சினுக்கு பின்பு இந்திய அணியின் ரன் மெஷினாக இருந்து வரும் கேப்டன் விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசி அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார், முதல் 2 இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (100) மற்றும் ரிக்கி பாண்டிங் (71) ஆகிய ஜாம்பவான்கள் உள்ளனர்.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவர் படுமோசமான பார்மில் இருந்து வருவது நமக்கு தெரியும், கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் குவித்து அவர் சதம் அடித்திருந்தார், அதன்பின் கடந்த 2 வருடங்களாக ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
- குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக களமிறங்க 23 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை, கடந்த 2020 ஆம் ஆண்டு வெறும் 116 ரன்களை 19.33 என்ற படுமோசமான சராசரியில் ரன்களை அடித்த அவர் 2021ஆம் ஆண்டு இதுவரை 483 ரன்களை 28.41 என்ற விகிதத்தில் குவித்து சற்று முன்னேற்றம் கண்டுள்ளார்.
கேப்டன்ஷிப் சுமை:
இதன் காரணமாக தனது பேட்டிங் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அவர் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அப்போது பணிச்சுமையை குறைக்க இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் ஆனால் எந்த ஒரு உலக கோப்பையையும் வெல்லவில்லை என்பதை காரணமாக வைத்து ஒருநாள் கேப்டன் பதவியும் அவரிடமிருந்து பிசிசிஐ பறித்துவிட்டது.
சர்ச்சையாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் அவரின் கேப்டன்ஷிப் சுமை பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, இனிமேல் அவர் தனக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கேப்டன்ஷிப் செய்ய உள்ளதால் இனி அவருக்கு சுதந்திரமாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு சற்று அதிகமாக கிடைக்கும்.
ராசியான தென்ஆப்பிரிக்கா:
- தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை அவர் பங்கேற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய 10 இன்னிங்சில் 558 ரன்களை 55.80 என்ற மிகச் சிறப்பான சராசரியில் குவித்துள்ளார், இதில் 2 அரை சதங்களும் 2 சதங்களும் அடங்கும்.
- மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2 சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரராகவும் விராட் கோலி திகழ்கிறார்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் 20 இன்னிங்ஸ்ஸில் 1075 ரன்களை 59.72 என்ற சராசரியில் குவித்துள்ளார், இதில் 3 அரை சதங்களும் 3 சதங்களும் அடங்கும், அதிகபட்ச ஸ்கோர் 254* ஆகும்.
உலகசாதனை 71வது சதம்:
இப்படிப்பட்ட ராசியான தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2 வருடங்களாக தொட முடியாமல் இருக்கும் 71வது சதம் என்ற இலக்கை விராட் கோலி இந்த முறை எட்ட வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
அத்துடன் அவர் இந்த 71ஆவது சதத்தை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்து புதிய உலக சாதனையையும் அவர் படைப்பார்.
- ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இதுவரை தலா 41 சதங்களை கேப்டனாக அடித்து இந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.