IND vs SA : தென்ஆப்பிரிக்காவில் கவனம் ஈர்க்க கூடிய 5 தரமான இந்திய வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2021 - 23 தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரானது இந்தியாவிற்கு கடும் சவாலை அளிக்கக்கூடிய ஒரு தொடராக கருதப்படுவதால் இந்த தொடருக்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்த சவால் மிகுந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்க உள்ளது.

கவனம் ஈர்க்க கூடிய 5 வீரர்கள்:

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற கரையை இம்முறை துடைக்க இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர். இந்த வேளையில் சவால் மிகுந்த தென்னாப்பிரிக்க மண்ணில் எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூடிய 5 இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1. விராட் கோலி :

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் விராட்கோலி திணறி வந்தாலும் 2021 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளது அவர் சோடை போகவில்லை என்பதை காட்டுகிறது.

வரலாற்றில் சச்சின் உட்பட பல வீரர்கள் ஒரு சில கட்டத்தில் இது போல பாரம் இல்லாமல் தவித்தது உண்டு ஆனாலும் அந்த சவால் மிகுந்த முக்கியமான நேரத்தில் ரன்களை குவித்து இந்தியாவிற்கு வெற்றிகளை தேடித் தந்து தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எனவும் இவர்கள் நிரூபிக்க தவறியதில்லை.

  • இதற்குமுன் இது போன்ற சவால் மிகுந்த நேரங்களில் ரன்களைக் குவித்து தனது பேட் வாயிலாக விராட் கோலி பலமுறை பதிலடி கொடுத்துள்ளார், தற்போது வெள்ளைப் பந்து கேப்டன் பதவியில் இருந்து முற்றிலுமாக முழுக்க போட்டுள்ள காரணத்தால் இனி சுதந்திரமாக விளையாட அவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும், எனவே நிச்சயமாக தென் ஆப்ரிக்க தொடரில் ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு அவர் பதிலடி கொடுப்பார் என நம்பலாம்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி:

  • போட்டிகள் : 12, ரன்கள் : 1075, சராசரி : 59.72, சதங்கள் : 3.

2. ஷ்ரேயஸ் ஐயர் :

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் கடந்த 4 வருடங்களாகவே கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் களமிறங்கும் வாய்ப்பு பெற்றார், கான்பூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

  • இதுவரை அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களை 50.50 என்ற சிறப்பான சராசரியில் குவித்துள்ளார்.

இளம் வீரராக இருக்கும் இவர் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் களமிறங்கும் வாய்ப்பை இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பெற்றுள்ளார், எனவே வெளிநாடுகளில் இவரின் பேட்டிங் எந்த அளவுக்கு இருக்கிறது என சோதித்துப் பார்க்க இது ஒரு நல்ல தருணமாகும், இந்த டெஸ்ட் தொடரில் அவருக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும் ஏதேனும் ஒரு சில போட்டிகளில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

3. ரவிச்சந்திரன் அஷ்வின் :

தமிழகத்தின் தங்கமான சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை வெறும் 81 டெஸ்ட் போட்டிகளில் 427 விக்கெட்டுகள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

  • இத்துடன் 2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராகவும் முதலிடம் பிடித்துள்ள இவர் லோயர் மிடில் ஆர்டரில் கணிசமாக ரன்கள் குவிக்க கூடியவராக உள்ளார்.

மேலும் ரவீந்திர ஜடேஜா காயமடைந்துள்ளதால் இந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு பெறுவார் என நம்பலாம்.

  • பொதுவாக அஸ்வின் வெளிநாடுகளில் சரிப்பட்டு வரமாட்டார் என்ற பெயர் இருந்து வருகிறது, அதற்கேற்றார் போல் இதற்கு முன் தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்.

எனவே தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவர் இந்த தென்ஆப்பிரிக்க தொடரில் தனது திறமையை வெளிக்காட்டி வெளிநாடுகளில் சரிப்பட்டு வரமாட்டார் என நினைப்பவர்களின் முகத்தில் கரியைப் பூச நிச்சயமாக முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின்:

  • போட்டிகள் : 10, விக்கெட்கள் : 53, 5 விக்கெட் ஹால் : 5.

4. ஜஸ்பிரித் பும்ரா:

இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் முதன்மை பவுலராக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கையை இதே தென்னாப்பிரிக்காவில் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம், தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக களமிறங்கிய இந்த நட்சத்திரம் அந்த தொடரிலேயே ஜொஹனஸ்பேர்க் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

  • அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஹாட்ரிக், ஆஸ்திரேலியாவில் அதிரடியான பந்துவீச்சு என கடந்த 2 வருடங்களில் முன்பை விட பல மடங்கு அனுபவத்தைப் பெற்றுள்ளார், சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் நல்ல ஓய்வு எடுத்து அணிக்கு திரும்பியுள்ள இவர் தென்னாபபிரிக்காவை நிச்சயமாக அச்சுறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா:

  • போட்டிகள் : 3, விக்கெட்கள் : 14, 5 விக்கெட் ஹால் : 1.

5. முகமத் சிராஜ் :

தனது தந்தை இறந்தபோது கூட அவர் முகத்தை காண செல்லாமல் இந்தியாவிற்காக விளையாட விரும்பிய முஹம்மது சிராஜ்க்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு தேடி வந்தது, கிடைத்த வாய்ப்பில் அதிரடியாக பந்துவீசிய இவர் முதல் தொடரிலேயே ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி ஆகியோருக்கு அடுத்து 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே நிலைகுலையும் அளவுக்கு மிகவும் அற்புதமாக பந்து வீசினார், குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இவரின் பந்துவீச்சால் வெற்றி பெற்ற இந்தியா தலைநிமிர்ந்து வீர நடை போட்டது.

முகமத் சிராஜ் எப்போதுமே முழு எனர்ஜி கொண்டவர், இவர் அந்த நாளின் முதல் ஓவரை வீசுகிறாரா அல்லது 90 வயதுவரை வீசுகிறாரா என யோசிக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்

என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேற்று முன்தினம் சிராஜை மனதார பாராட்டினார். இப்படிப்பட்ட திறமை கொண்ட சிராஜ் நிச்சயமாக தென் ஆப்ரிக்க தொடரில் அதிரடியாக பந்துவீசி கவனத்தை ஈர்க்க கூடியவராக இருப்பார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜ்:

  • போட்டிகள் : 10, விக்கெட்கள் : 33 : 5 விக்கெட் ஹால் : 1.

Previous Post Next Post

Your Reaction