அஷ்வின் இதயத்தை உடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - அஷ்வின் கருத்துக்கு ரவி சாஸ்திரி பதில்

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

Photo Credits : AFP


கடந்த 2018/19 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 70 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ செய்து டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

கழட்டிவிடப்பட்ட அஷ்வின்:

அந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார், எஞ்சிய 3 போட்டிகளில் உடல்தகுதி காரணமாக சேர்க்கப்படவில்லை, அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

  • அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் சிட்னி நகரில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவரும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

நொறுங்கி போனேன்:

ஆஸ்திரேலிய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுநாள் வரை ஒரு முறை கூட 5 விக்கெட் ஹால் எடுத்ததில்லை ஆனால் குல்தீப் யாதவ் அந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்ததற்காக மனதார மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் அதையே காரணமாக வைத்து அப்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குல்தீப் யாதவை உயர்த்தி பேசியதும் தன்னை மட்டம் தட்டி பேசியதும் இதயத்தை நொறுக்கியதாக அந்தப் பேட்டியில் அஷ்வின் குறிப்பிட்டிருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த முழு பேட்டி பற்றி படிக்க 👇

சாஸ்திரி - விராட் கோலியால் 2018 லேயே ரிட்டையராக நினைத்தேன் : வேதனைபடும் ரவிச்சந்திரன் அஷ்வின்

மகிழ்ச்சியே:

இந்த சர்ச்சையான கருத்து பற்றி ரவிசாஸ்திரி தற்போது அஷ்வினுக்கு பதில் அளித்துள்ளார். இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் அளித்துள்ள பேட்டியில்,

சிட்னி டெஸ்டில் அஷ்வின் விளையாடவில்லை அந்த சமயம் குல்தீப் சிறப்பாக பந்துவீசினார் எனவே அவருக்கு நான் வாய்ப்பளித்தது நியாயமானதே. அதற்காக அஸ்வின் மனமுடைந்து இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே ஏனெனில் அதன் காரணமாக வித்யாசமான ஒன்றை அவரை செய்ய வைத்தேன். மற்றவர்களின் சாப்பாட்டிற்கு ஊறுகாயாக இருப்பது என்னுடைய வேலை அல்ல, எந்தவித பாரபட்சமும் இன்றி உண்மைத் தன்மையுடன் இருப்பதே என்னுடைய வேலை

என கூறிய சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஒரு பயிற்சியாளர் உங்களுக்கு சவாலை அளித்தால் அதற்காக நீங்கள் அழுது கொண்டு வீட்டிற்கு செல்லக்கூடாது, அந்த இடத்தில் நான் இருந்தால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பயிற்சியாளரின் சவால் தவறு என நிரூபிப்பேன்.குல்தீப் யாதவ் விஷயத்தில் அஸ்வின் பற்றி நான் கூறிய கருத்து அவரை மனமுடைத்து இருந்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனெனில் அது அவரை வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க வைத்தது

என இது பற்றி மேலும் கூறிய ரவிசாஸ்திரி தன்னை ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி எறிவது போல் உணர்வதாகவும் அதனால் மனமுடைந்து ஓய்வுபெற எண்ணியதாகவும் அஸ்வின் கூறிய கருத்து பற்றி பேசுகையில்,

2019 - 2021 வரையிலான காலகட்டத்தில் பாலாடை போல அவர் பந்து வீசினார், மேலும் பேருந்துக்கு வெளியே தூக்கி எறியப்பட்டேன் என்ற அவரின் கருத்துக்கு "அவரை தூக்கி எறிந்தாலும் நான் பேருந்து ஓட்டுனரை 2 - 3 அடிகள் முன்பாகவே நிறுத்தச் சொல்லி கூறியிருந்தேன்". 2018இல் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என அவரிடம் கூறியிருந்தோம், அவரும் அதில் செயல்பட்டு உடல் தகுதியை முன்னேறி பந்து வீச தொடங்கினார், தற்போது பாருங்கள் அவர் உலகத்தரம் வாய்ந்தவராக இருக்கிறார்

என கூறிய சாஸ்திரி தமது கருத்துக்களால் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த பவுலராக முன்னேறியதையும் பார்க்க வேண்டும் என பதிலளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Previous Post Next Post

Your Reaction