தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா களம் இறங்கயிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ம் தேதி முதல் துவங்கவுள்ளது, 2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்தியா பங்கேற்கும் சவாலான தொடராக இந்த தொடர் கருதப்படுகிறது.
Photo Credits : Getty Images |
செஞ்சூரியன் நகரில் தொடங்கயிருக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணியினர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோஹித் சர்மா:
இந்த தொடரில் நல்ல பார்மில் இருந்த துணை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் விலகியுள்ளது மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.
பேட்டிங் வரிசை:
இந்த வேளையில் விராட் கோலி, புஜாரா போன்ற அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்கள் கடந்த 2 வருடங்களாக பார்ம் இல்லாமல் தவித்து வருவது இந்திய அணிக்கு கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.
- இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய துணைக் கேப்டன் கேஎல் ராகுல் 5வது இடத்தில் களம் இறங்கும் வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த சிரமம் இருப்பதாகவும் இது பற்றி விவாதித்து நாளை தான் முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
5வது இடம்:
இந்த குழப்பத்திற்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் காயம் அடைந்ததே முக்கிய காரணமாகும்.
- கேஎல் ராகுல் - மயங் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க 3வது இடத்தில் புஜாராவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, 4வது இடத்தில் கேப்டன் விராட் கோலியும் 6வது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்க உளளனர்.
அப்படியானால் டாப் ஆர்டர் சொதப்பினாலும் இந்திய மிடில் ஆர்டரை தாங்கிப் பிடிக்க போகும் அந்த 5வது வீரர் யார் என்பது பற்றி பார்ப்போம்:
இந்த இடத்திற்கு அஜிங்கிய ரஹானே, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய 3 வீரர்கள் தகுதியானவர்களாக உள்ளனர்.
அஜிங்கிய ரகானே:
இதில் அனுபவத்தை மதித்து ரகானேவுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என பார்த்தால் அவர் கடந்த 2 வருடங்களாக எந்த அளவுக்கு விளையாடி வருகிறார் என பல ரசிகர்களும் அறிவார்கள், போதாகுறைக்கு நியூசிலாந்து தொடரில் அவர் லேசான காயம் அடைந்ததால் இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் சிறப்பாக விளையாடுவாரா என்பது சந்தேகமே.
ஷ்ரேயஸ் ஐயர்:
மறுபுறம் கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.
- இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களை 50.50 என்ற நல்ல சராசரியில் எடுத்து 5வது இடத்தில் பேட்டிங் செய்யும் தகுதி உடையவராக இருக்கிறார்.
ஆனால் அவர் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் அதுவும் இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் மட்டுமே கொண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிம் சவுத்தி, கைல் ஜமிசன் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டார் என்றாலும் சுழல் பந்து வீச்சுக்கு எதிராகவே அவர் அதிக ரன்களை குவித்துள்ளார் எடுத்துக்காட்டாக கான்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் அடித்த சதத்தில் 68 ரன்கள் சுழல் பந்துவீச்சாளர்களை பந்தாடி எடுத்ததாகும்.
- மறுபுறம் கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது 91.34% பந்துகள் வேகப்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டதாகும், எனவே தற்போதைய நிலைமையில் இந்த தொடரில் நேரடியாக ஸ்ரேயாஸ் அய்யர் 5 ஆவது வீரராக களமிறங்குவது சரியான முடிவாக இருக்காது.
ஹனுமா விஹாரி:
கடந்த மாதம் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ சார்பில் விளையாடிய ஹனுமா விஹாரி 13*, 63, 72*, 54, 25 என சிறப்பான ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க கால சூழ்நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு உள்ளார், சொல்லப் போனால் அங்கு சிறப்பாக விளையாடி 250க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த காரணத்தினாலேயே தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் அவர் மீண்டும் இடம் பிடித்தார்.
- அதற்காக அவர் எதிர்கொண்டு ரன்கள் குவித்த ஏ அணியும் முதன்மையான தென்ஆப்பிரிக்கா அணி சமம் ஆகிவிடாது என்பது உண்மை, இருப்பினும் அவர் இதுவரை இந்தியாவிற்காக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடியதாகும்.
இங்கிலாந்தில் அறிமுகமாக களமிறங்கிய இவர் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் சதம் அடித்தவர், மேலும் 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.
- குறிப்பாக கடந்த ஜனவரியில் சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடி 237 நிமிடங்கள் பேட்டிங் செய்து தோற்க இருந்த போட்டியை அஷ்வின் உடன் இணைந்து டிரா செய்ய உதவினார்.
வெளிநாடுகளில் இவரின் பேட்டிங் சராசரி 34.11 என்பது அனுபவ வீரர்களான புஜாரா (34.00) மற்றும் விராட் கோலியை (32.11) விட அதிகமாக உள்ளது, எனவே 5வது இடத்தில் இவரை நம்பி களமிறக்கலாம்.