MrJazsohanisharma

Vijay Hazare Trophy 2021 : மிரட்டல் சேசிங், சவுராஷ்டிராவை சாய்த்த தமிழ்நாடு பைனலுக்கு தகுதி பெற்று அசத்தல்

இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர் மிகவும் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, கடந்த 8ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கு பெற்றன.

Photo Credits : BCCI Domestic


இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு மொத்தம் 5 ரவுண்டுகள் அடங்கிய லீக் சுற்றில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பெற்றது, இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

நாக் அவுட் சுற்று:

இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காலிறுதி சுற்றில் அண்டை மாநிலமான பலம் வாய்ந்த கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

  • இதை அடுத்து இன்று இந்த கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடைபெற்றது, அதில் காலை 9 மணிக்கு துவங்கிய 2வது அரையிறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணியை தமிழ்நாடு எதிர்கொண்டது.

ரன்களை வழங்கிய தமிழ்நாடு:

இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஹார்விக் தேசாய் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த செல்டன் ஜேக்சன் - ஜடேஜா ஜோடி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவிக்க தொடங்கியது.

இதில் விஸ்வராஜ் ஜடேஜா 52 ரன்களில் ஆட்டமிழந்து போதிலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய செல்டன் ஜேக்சன் 125 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட சதம் விளாசி 134 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்ததாக வந்த மன்கட் 37 ரன்கள், வசவடா 57 ரன்கள் என தமிழ்நாடு பந்துவீச்சாளர்களை அதிரடியாக விளையாடி தேவையான ஸ்கோர்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

  • இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த சௌராஷ்டிரா 310 ரன்கள் குவித்தது, தமிழ்நாடு சார்பில் பந்துவீச்சில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளும் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

மிரட்டல் சேசிங்:

இதை தொடர்ந்து 311 என்ற பெரிய இலக்கை துரத்திய தமிழகத்தின் தொடக்க வீரர்களான ஜெகதீசனை டக் அவுட் செய்த நட்சத்திர வீரர் சேட்டன் சக்காரியா விஜய் ஷங்கரை 4 ரன்னில் அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார், இதனால் 3.2 ஓவர்களில் 23/2 என தமிழ்நாடு தடுமாறியது.

ஆனால் மறுபுறம் நிலைத்து நின்ற மற்றொரு தொடக்க வீரர் பாபா அபரஜித் அடுத்து வந்த பாபா இந்திரஜித் உடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார், 3வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் சிறப்பாக பேட்டிங் செய்த பாபா இந்திரஜித் 124 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட சதம் விளாசி 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • அபராஜித் 50 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 31 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 61 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 70 எடுத்ததால் தமிழகத்தின் வெற்றி ஓரளவு உறுதியானது.
  • ஆனால் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஷாருக்கான் 17 ரன்களிலும் சித்தார்த் 1 ரன்களிலும் எடுத்திருந்த நிலையில் முக்கியமான கடைசி கட்ட ஓவர்களில் அவுட் ஆனார்கள்.

இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்த தமிழ்நாடு கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சாய் கிஷோர் அதிரடியாக பவுண்டரி அடித்து தமிழகத்தை மிரட்டலான வெற்றி பெறச் செய்தார், சௌராஷ்டிரா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய சேட்டன் சக்காரியா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  • இறுதியில் 50 ஓவர்களில் 314/8 என்ற போராட்ட பேட்டிங் வாயிலாக அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு சௌராஷ்டிராவை வெறும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

மாபெரும் பைனல்:

முன்னதாக அதே ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹிமாச்சல் பிரதேச அணியும் இந்த கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து வரும் டிசம்பர் 26 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஷாவாய் மன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

  • இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6-வது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை தமிழ்நாடு வென்று சாதனை படைக்குமா என தமிழக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Previous Post Next Post

Your Reaction