IND vs SA 1st Test Freedom Seires 2021 : வலுவான தென்ஆப்பிரிக்காவில் இந்தியா வெல்லுமா - வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் - விக்கெட்கள் எடுத்தவர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 - 23 கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதி அன்று பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.


இந்த தொடரானது இரு நாடுகளின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் நினைவாக "சுதந்திரக் கோப்பை" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

  • கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்த சுதந்திரக் கோப்பை நடைபெற்றது அதில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றதால் இந்த தொடரின் தற்போதைய சாம்பியனாக இந்தியா உள்ளது.

போட்டி விவரம்:

தென்ஆப்பிரிக்கா V இந்தியா, முதல் டெஸ்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 -23.

டிசம்பர் 26 - 30, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி, சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானம், செஞ்சூரியன்.

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.

முன்னோட்டம்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இதுவரை ஒருமுறை கூட வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை, எனவே இந்த முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுத விராட் கோலி தலைமையிலான இந்திய அணி போராட உள்ளது.

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே கெத்து என்பது போல் இந்த முறையும் டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை தோற்கடிக்க முழு முயற்சியுடன் விளையாட உள்ளதால் இந்த டெஸ்ட் தொடருக்காக இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புள்ளிவிவரம்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 39 போட்டிகளில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.

  • அதில் தென் ஆப்பிரிக்கா 15 போட்டிகளிலும் இந்தியா 14 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏறக்குறைய சம பலத்துடன் உள்ளன, 10 போட்டிகள் டிராவில் முடிந்தன.

போட்டி நடைபெறும் தென்னாப்பிரிக்க மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா இதற்கு முன் 20 போட்டிகளில் களமிறங்கியுள்ளது, அதில் 3 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது, 10 போட்டிகளில் பரிதாப தோல்வி அடைந்தது, 7 போட்டிகள் ட்ராவில் முடிந்தன.

தொடர்கள் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 1992 முதல் 2018 வரை 7 முறை தென்னாப்பிரிக்காவில் இந்தியா டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது, அதில் 6 தொடர்களில் பரிதாபமாக தோல்வி அடைந்த இந்தியா கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் எம்எஸ் தோனி தலைமையில் 1 - 1 என போராடி டிரா செய்தது.

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்ஆப்பிரிக்க தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 - 1 என தோல்வி அடைந்தது.

  • இதிலிருந்தே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம்.

கடைசி 5 போட்டிகள்:

இந்த தொடருக்கு முன்பாக இந்தியா களம் கண்ட கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் 3 வெற்றிகளையும் 1 தோல்வியையும் 1 ட்ராவையும் பதிவு செய்துள்ளது.

அதேபோல இந்த தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா பங்குபெற்ற 5 கடைசி போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்து உள்ளது.

அதிக ரன்கள்:

வரலாற்றில் இந்தியா தென்னாப்பிரிக்கா மோதிய ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்தியாவைச் சேர்ந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

  • அவர் 25 டெஸ்ட் போட்டிகளில் 1741 ரன்களை 42.46 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்துள்ளார், இதில் 5 அரை சதங்களும் 7 சதங்களும் அடங்கும்.

தற்போதைய இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேப்டன் விராட் கோலி 1075 ரன்களுடன் உள்ளார், அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இதற்கு வரை 3 அரை சதங்களும் 3 சதங்களும் அடித்துள்ளார்.

  • தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜாம்பவான் ஜாக் காலிஸ் 18 போட்டிகளில் 1734 ரன்களை 69.36 என்ற சராசரியில் குவித்துள்ளார், இதில் 5 அரை சதங்களும் 7 சதங்களும் அடங்கும்.

அதிக விக்கெட்கள்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 21 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடம் பிடித்து சாதித்துள்ளார்.

  • தற்போதைய இந்திய அணியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 10 போட்டிகளில் 53 விக்கெட்டுகள் வீழ்த்தி நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார்.

தென் சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் 14 போட்டிகளில் 65 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

Previous Post Next Post

Your Reaction