NZ vs BAN 2nd Test : நியூஸிலாந்து பதிலடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவோன் கான்வே புதிய உலகசாதனை

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு வந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் புத்தாண்டு தினத்தன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேசம் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனை படைத்தது.

Photo Credits : Getty Images


இதை அடுத்து வங்கதேசம் 1 - 0* என முன்னிலையுடன் இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது, இந்த போட்டியுடன் நியூசிலாந்தின் நட்சத்திர அனுபவ வீரர் ராஸ் டைலர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

நியூஸிலாந்து பதிலடி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் போட்டியில் வங்கதேசத்திடம் பெற்ற தோல்விக்காக பதிலடி கொடுக்கத் துவங்கியது.

வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் நிதானத்துடன் பேட்டிங் செய்ய தொடங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வில் எங் மற்றும் கேப்டன் டாம் லாதம் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்து அருமையான தொடக்கம் கொடுத்தனர், இதில் வில் எங் 54 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டேவோன் கான்வே உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் லாதம் தொடர்ந்து வங்கதேச பந்து வீச்சாளர்களை திணறடித்து ரன்களை குவித்தார்.

  • முதல் நாள் முழுவதும் 2வது விக்கெட்டுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி கடைசி வரை அவுட் ஆகாமல் 201* ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்ததால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 349/1 என்ற வலுவான நிலையில் உள்ளது, களத்தில் சதம் விளாசிய டாம் லாதம் 186* ரன்களுடனும் டேவோன் கான்வே சதத்தை நெருங்கி 99* ரன்களுடனும் உள்ளனர்.

டேவோன் கான்வே உலகசாதனை:

இந்த போட்டியில் 148 பந்துகள் சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 99* ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்தின் டேவோன் கான்வே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 5 போட்டிகளின் முதல் இன்னிங்சில் தொடர்ந்து ஐந்து 50+ ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

  • கடந்த 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான இவர் அந்த முதல் போட்டியிலேயே இரட்டை சதமடித்து 200 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

அந்த போட்டி முதல் தற்போதைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டி வரை இதுவரை அவர் விளையாடியுள்ள முதல் 5 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்ஸில் அடுத்தடுத்து 50 ரன்களுக்கு மேல் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:

  • 200, லார்ட்ஸ் - இங்கிலாந்துக்கு எதிராக, 2021.
  • 80, எட்ஜ்பஸ்டன் - இங்கிலாந்துக்கு எதிராக, 2021.
  • 54, சௌதாம்ப்டன் - இந்தியாவுக்கு எதிராக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2021.
  • 122, மௌன்ட் மௌங்கனி - வங்கதேசத்துக்கு எதிராக, 2022.
  • 99*, க்றிஸ்ட்சர்ச் - வங்கதேசத்துக்கு எதிராக, 2022* (தற்போதைய போட்டி).

இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 5 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:

1. சுனில் கவாஸ்கர் : 831 

2. ஜார்ஜ் ஹெட்லி : 714 

3. கான்ராட் ஹண்ட் : 622 

4. டான் ப்ராட்மேன் : 607

5. டேவோன் கான்வே : 603*

இந்த டெஸ்ட் போட்டியில் இவர் இன்னும் ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் மேலே செல்ல பிரகாச வாய்ப்புள்ளது.

Previous Post Next Post

Your Reaction