வெறும் ஷார்துலை லார்ட் தாகூராக உருவெடுக்க வைத்த அந்த 2019 ஐபிஎல் பைனல் பால் ! நெகிழ்ச்சி கதை

தென்ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது 2 போட்டிகளின் முடிவில் 1 - 1* என சமனில் உள்ளது, இதை அடுத்து இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

Photo Credits : BCCI


இந்த விறுவிறுப்பான தொடரில் ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையிலும் இந்தியா போராடி தோல்வியடைந்தது.

தூள் கிளப்பிய தாகூர்:

அந்த போட்டியில் இந்தியா தோற்ற போதிலும் முதல் இன்னிங்சில் யாரும் எதிர்பாரா வண்ணம் அபாரமாக பந்துவீசிய ஷார்துல் தாக்கூர் 61 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்து தென்னாபிரிக்காவை திணறடித்தார்.

  • இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பந்துவீச்சாளர், தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஆசிய மற்றும் இந்திய பந்துவீச்சாளர், அந்த போட்டி நடந்த ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த ஆசிய மற்றும் இந்திய பவுலர் உள்ளிட்ட முக்கியமான சாதனைகளைப் படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார்.

கலக்கல் தாகூர்:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் காபா நகரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் காயம் அடைந்த காரணத்தால் ஷார்துல் தாகூருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, அதை கச்சிதமாக பயன்படுத்திய இவர் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாறியபோது பேட்டிங்கில் 67 ரன்களும் 2வது இன்னிங்சில் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு உதவினார்.

  • இது மட்டுமல்லாமல் கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தடுமாறியபோது பேட்டிங்கில் 57 ரன்கள் குவித்து அசத்தினார், அதேபோல் பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகள் சாய்த்து மீண்டும் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார்.

லார்ட் தாகூர்:

பொதுவாகவே ஒரு சுமாரானவராக காட்சியளிக்கும் இவர் ஒரு முக்கியமான நேரத்தில் எதிரணி எதிர்பார்க்காத வேளையில் இந்தியா தடுமாறும் வேளையில் மிகச் சிறப்பாக செயல்படுவது இவரை மற்றவர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது, குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா பார்ட்னர்ஷிப் அமைக்கும் போதெல்லாம் அதை தாகூர் உடைத்து காட்டினார்.

இதன் காரணமாக இவரை இந்திய ரசிகர்கள் "லார்ட் ஷர்துல் தாகூர்" என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள், சில முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் கூட அவரை "லார்ட் தாகூர்" என கேளிக்கையாக அழைத்து மனதார பாராட்டி வருகிறார்கள்.

2019 ஐபிஎல் பைனல்:

அவரின் இந்த அற்புதமான வளர்ச்சிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் அதில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

  • அந்த நேரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் சென்னை வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அதை எதிர்கொண்ட தாகூரை மும்பையின் லசித் மலிங்கா அவுட் செய்ததால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

அந்த நாளில் நெஞ்சை பிளந்த அந்த தோல்விக்கு தாம் தான் காரணம் என மிகவும் வருத்தப்பட்ட அவர் பெவிலியனில் ஒரு மூலையில் நீண்ட நேரம் சோகத்துடன் அமர்ந்து இருந்ததாக சென்னை அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சைமன்ஸ் கூறியுள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

"நான் இடம் வகிக்கும் அதே அணியில் அவரும் விளையாடி வருகிறார், கடந்த 2 வருடங்களுக்கு முன் மும்பைக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி ஒரு ரன் எடுத்தால் டை என்ற நிலையில் அதை எதிர்கொள்ள சென்ற ஷர்துல் தாகூர் லசித் மலிங்காவிடம் அவுட்டானார், அந்த போட்டியில் பெற்ற தோல்வியால் மனமுடைந்த அவர் அறையின் மூலையில் வெகுநேரமாக சோகத்துடன் அமர்ந்திருந்தார், "இது உன்னுடைய தவறில்லை" என யாரும் அவரிடம் ஆறுதல் கூறவில்லை, சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்.

என கூறிய எரிக் சைமன்ஸ் அந்தப் போட்டி அவரின் மனதை முழுமையாக மாற்ற முக்கியக் காரணமாக அமைந்ததாக கூறினார். இது பற்றி மேலும் அவர் பேசுகையில்,

அந்த நாளுக்கு பின் "அது போன்றதொரு மோசமான தருணம் இனி எனக்கு எப்போதுமே நேரக் கூடாது" என முடிவெடுத்து அதற்கான தீர்வை நோக்கி தனது பேட்டிங்கை முன்னேற்றம் செய்தார், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போல பேட்டிங் செய்யும் முறை உட்பட பல்வேறு வகையான முயற்சிகளையும் யுத்திகளையும் தனது பேட்டிங்கில் போட்டுள்ளார், அந்த மோசமான தருணத்திலிருந்து தற்போது இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடும் தருணம் வரை அவரின் வளர்ச்சி அனைத்தும் அவரின் குணத்தை காட்டுகிறது

என கூறிய அவர் ஐபிஎல் 2019 பைனலுக்கு பின் கடந்த 2 வருடங்களாக தனது பேட்டிங்கை முன்னேற்ற தாக்கூர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் அதன் காரணமாகவே இந்த அளவுக்கு அவரின் கிரிக்கெட் முன்னேறி உள்ளது என்ற சுவாரசியமான ரகசியத்தை தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction