தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர்களில் விளையாடி வருகிறது, இதில் முதலாவதாக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் வாயிலாக அந்தப் போட்டி நடந்த செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் விராட் கோலி தலைமையிலான இந்தியா படைத்தது.
கோட்டைகள் தகர்ப்பு:
அத்துடன் பங்குபெற்ற 26 போட்டிகளில் 21 வெற்றிகளை குவித்து தென் ஆப்பிரிக்காவின் கோட்டையாக இருந்த செஞ்சூரியன் மைதானத்தை தகர்த்து இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது, இது மட்டுமல்லாமல் கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு இதே போல ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா காபா கோட்டையிலும் இந்தியக் கொடியை பறக்க விட்டது.
அதேபோல் இங்கிலாந்தின் கோட்டையாக இருந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மெகா வெற்றி பெற்றது, அத்துடன் அதே டெஸ்ட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 1971க்கு பின்பு முதல் முறையாக ஓவல் மைதானத்தில் 50 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை தோற்கடித்து ஓவல் கோட்டையையும் தகர்த்து வெற்றி கொடியை பறக்க விட்டது.
இந்தியாவுக்கு கிடைத்த வரம்:
இந்த அடுத்தடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை இந்தியாவிற்கு கேப்டனாக விராட் கோலி பெற்றுக்கொடுத்தார் என்றே கூறலாம், இன்னும் சொல்லப்போனால் அவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரம் என்றால் மிகையாகாது.
இதை வெறும் பெருமை படுத்துவதற்காக சொல்லவில்லை, அதற்கான ஆதாரம் இதோ:
1. வரலாற்றில் ஆசியாவுக்கு வெளியே ஒரு காலண்டர் வருடத்தில் அதிகபட்சமாக 4 வெற்றிகளை இதுவரை வெறும் 2 முறை மட்டுமே இந்தியா பதிவு செய்துள்ளது. அவையாவன:
- 2018 : மெல்போர்ன், அடிலெய்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), நாட்டிங்காம் (இங்கிலாந்துக்கு எதிராக), ஜொஹனஸ்பேர்க் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)
- 2021* : பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), லண்டன் ஓவல் மற்றும் லார்ட்ஸ் (இங்கிலாந்துக்கு எதிராக), செஞ்சூரியன் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக).
மேற்கூறிய வெற்றிகள் அனைத்தும் விராட் கோலி தலைமையில் வந்ததாகும்.
2. அதேபோல் ஆசியாவுக்கு வெளியே இந்தியாவிற்கு சவால் அளிக்கக்கூடிய கடினம் வாய்ந்த நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் 1990 முதல் 2017 வரை இந்தியா பெற்ற வெற்றிகள் வெறும் 8 ஆகும்.
ஆனால் விராட் கோலி தலைமையில் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆட்சி செய்ய துவங்கிய 2018 முதல் தற்போது வரை மட்டும் பெற்ற வெற்றிகள் 9* ஆகும், அதாவது 27 ஆண்டுகளில் பெற்ற வெற்றிகளை வெறும் 3 வருடங்களில் தற்போதய அணி சாதித்து காட்டியுள்ளது.
3. இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேனா நாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன்கள்:
- விராட் கோலி : 7*
- எம்எஸ் தோனி : 3
- பட்டோடி : 3
4. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேனா நாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய கேப்டன்கள்:
- விராட் கோலி (இந்தியா) : 7*
- ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்) : 5
5. தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து எந்த அளவுக்கு மண்ணை கவ்வி வருகிறது என உங்களுக்கு தெரியும் ஆனால் அதே ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2016 டிசம்பருக்கு பின் இதுவரை மொத்தம் 8 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன.
- அதில் இந்தியா மட்டுமே கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 2 முறை அதுவும் அடுத்தடுத்த நடந்த டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைத்தது.
ஸ்டீவ் வாக் சாதனை:
ஒரு அணி சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது சாதாரணம் ஆனால் வெளிநாடுகளில் வெற்றி பெற்றால் அது உலகின் தலை சிறந்த அணி என்பதில் சந்தேகமே இல்லை, அந்த வகையில் வெளிநாடுகளில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி இதுவரை 40 வெற்றிகளைக் குவித்து ஏற்கனவே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக உருவெடுத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த 4வது கேப்டனாகவும் ஜொலிக்கிறார்.
- கிரேம் ஸ்மித் : 51 வெற்றிகள்
- ரிக்கி பாண்டிங் : 48 வெற்றிகள்
- ஸ்டீவ் வாக் : 41 வெற்றிகள்
- விராட் கோலி : 40* வெற்றிகள்
தற்போது 40 வெற்றிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற இருக்கும் எஞ்சிய தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஸ்டீவ் வாக் சாதனையை சமன் செய்வார்.
- ஒருவேளை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஸ்டீவ் வாக் சாதனையை முந்தி புதிய சாதனையை படைப்பதுடன் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சரித்திரத்தையும் படைப்பார்.