இனிய புத்தாண்டு : 2022இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளின் முழு அட்டவணை இதோ

ஆங்கில புத்தாண்டு 2022ஆம் ஆண்டு இன்று துவங்கியதை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இன்று கோலாகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

Photo Credits : BCCI


இந்த இனிய தருணத்தில் இந்த வருடம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி பங்குபெறும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிய அட்டவணையை பார்ப்போம்:

வழக்கம் போல இந்த வருடமும் இந்திய கிரிக்கெட் அணி சொந்த சொந்த மண்ணிலும் வெளிநாடுகளுக்கும் சென்று பல எதிரணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற உள்ளது.

1. தென்ஆப்பிரிக்காவில்: தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது, இதில் ஏற்கனவே முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கடைசி 2 போட்டிகள் ஜனவரி 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

2. வெஸ்ட்இண்டீஸ்: இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இந்தியா அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் களமிறங்க உள்ளது.

வரும் பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பின் 15, 18, 20  ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

3. இலங்கை: இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை வரும் பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை சந்திக்கிறது.

அதன்பின் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 13, 15, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

4. ஐபிஎல் 2022 : இதைத்தொடர்ந்து இந்திய ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் 2022 சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே மாத வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. தென்ஆப்பிரிக்க டி20 : இதை அடுத்து வரும் ஜூன் மாதம் இந்தியாவுக்கு வரும் தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. ஜூன் 9, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தொடரானது அதற்கு அடுத்த சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வண்ணம் நடத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

6. இங்கிலாந்து: இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு பறக்கும் இந்தியா ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கு பெறுகிறது, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம், அந்த 5வது போட்டி தான் ஜூலையில் நடைபெற உள்ளது.

இது மட்டுமல்லாமல் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 12, 14, 17 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கிறது.

7. வெஸ்ட்இண்டீஸ் : அதை முடித்துக் கொண்டு அப்படியே வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஜூலை மாத இறுதியில் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்க உள்ளது.

8. ஆசிய கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியா அதைத் தொடர்ந்து இலங்கைக்கு பறந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக இந்த தொடர் இந்த ஆண்டு 20 ஓவர் தொடராக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

அத்துடன் இந்த தொடரில் பாகிஸ்தானை இந்தியா குறைந்தபட்சம் ஒரு போட்டியில் சந்திக்கும் என்பதும் உறுதியாகிறது.

9. டி20 உலககோப்பை : இதையடுத்து ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி பங்கு பெற உள்ளது.

10. வங்கதேசம்: 20 ஓவர் உலக கோப்பையை முடித்துவிட்டு நாடு திரும்பும் இந்திய அணி அதன் பின் வரும் டிசம்பர் மாதத்தில் அண்டை நாடான வங்க தேசத்திற்கு சென்று அங்கு அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்த வருடத்தை முடிக்க உள்ளது.

Previous Post Next Post

Your Reaction