இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார், கடந்த 1998 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக காலடி வைத்த இவர் படிப்படியாக வளர்ந்து 2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புகழ்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
Photo Credits : Getty Images |
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சரித்திர சாதனையை படைத்த அவர் அதன்பின் இந்திய அணியின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
- 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை போன்ற உலக கோப்பைகளையும் இந்தியாவிற்காக வென்றுள்ள இவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
கழட்டிவிடப்பட்டேன்:
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து எதற்காக கழட்டி விட்பட்டேன் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது பற்றி இந்தியா டிவியில் அவர் பேசுகையில்,
நான் 400 விக்கெட்டுகளை எடுத்த போது எனக்கு 31 வயது, அந்த வயதில் 400 விக்கெட்டுகள் எடுக்க முடிந்திருந்தால் அடுத்த 8 - 9 வருடங்களில் குறைந்தபட்சம் 100 விக்கெட்டுக்களையாவது எடுத்திருப்பேன் ஆனால் அதன்பின் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்னை தேர்வும் செய்யவில்லை. 400 விக்கெட்கள் எடுத்த ஒருவரை எதற்காக தூக்கி எறிந்தனர் என்ற கதை இன்றும் புரியாத புதிராக உள்ளது, இன்னும் கூட "உண்மையில் என்ன நடந்தது, நான் அணியில் இருப்பதால் யாருக்குப் பிரச்சினை" என நான் ஆச்சர்யப்படுகிறேன்
என கூறிய ஹர்பஜன் சிங் எதனால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டேன் என இன்னும் புரியவில்லை என குமுறினார், இவர் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் காலே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி இருந்தார்.
கடைசிவரை தெரில:
இது பற்றிய காரணத்தை நான் கேப்டனிடம் (தோனி) கேட்டேன் ஆனால் இறுதிவரை எந்த பதிலுமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் யார் இதன் பின்புலத்தில் உள்ளார்கள், எதனால் இது போல் நான் நடத்தப்படுகிறேன் என்பது பற்றி கேட்பதில் எந்த வித பயனும் இல்லை என உணர்ந்து கொண்டேன், இதைத்தொடர்ந்து கேட்டால் பதில் வராது என்பதால் இறுதியில் விட்டுவிட்டேன்
என இது பற்றி மேலும் தெரிவித்த ஹர்பஜன் அப்போது கேப்டனாக இருந்த எம்எஸ் தோனியிடம் இதுபற்றி கேட்டதாகவும் ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார், அதன்பின் கடந்த 2018 - 2020 வரையிலான சீசன்களில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியாயமான காரணம்:
417 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய சுழற்பந்து வீச்சாளராக இருந்த இவர் 2009 - 2010 ஆகிய காலகட்டங்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க தவறி வந்தார், அதனால் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வண்ணம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி ஒரு சில வருடங்களிலேயே அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் பவுலிங் ஜோடி எனக் கூறுமளவுக்கு பெயர் வாங்க தொடங்கியது, மேலும் தற்போதைய தேதியில் இந்த இருவரும் எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளார்கள் என நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
- அத்துடன் கடந்த மாதம்தான் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங்கை முந்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்து தனது தேர்வை அஸ்வினும் நியாயப்படுத்தியுள்ளார் என்று கூறலாம்.