ஆங்கில வருடம் 2021இல் உலகம் முழுவதிலும் பல அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் நிகழ்ந்தன, அதேபோல இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் சில வழக்கமான விசயங்கள் மாறி முதல் முறையாக வித்தியாசமான முடிவுகள் கிடைத்தன.
Photo Credits : Getty Images |
அந்த வகையில் 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக நிகழ்ந்த 20 முக்கியமான நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்:
1. காபா வெற்றி: 1988 ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது, 32 வருடங்களாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்த இந்த மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தி சரித்திரம் படைத்தது.
2. சறுக்கிய சென்னை: இதேபோல் தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது, கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 1998க்கு பின் முதல் முறையாக இந்தியா தோல்வி அடைந்தது.
3. வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: கடந்த பிப்ரவரி வங்கதேசத்தில் உள்ள சேட்டோகிராம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 395 ரன்கள் இலக்கை 4வது இன்னிங்சில் எட்டிப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் மேயேர்ஸ் இரட்டை சதம் அடித்து 210* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இந்த சரித்திர வெற்றிக்கு வித்திட்டார், இந்த 395 ரன்கள் இலக்கு என்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய கண்டத்தில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட இலக்காகும்.
4. கலக்கிய பாகிஸ்தான்: சொந்த மண்ணில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 என வைட்வாஷ் செய்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் கடந்த 18 வருடங்களுக்கு பின் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று அசத்தியது.
5. பாபர் அசாம் : ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2021 வரை தொடர்ந்து நம்பர் ஒன் ஒருநாள் கிரிக்கெட் பேட்டராக இருந்து வந்த இந்தியாவின் விராட் கோலியை முந்திய பாகிஸ்தானின் நட்சத்திரம் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய நம்பர் 1 பேட்டராக சாதனை படைத்தார்.
6. சூப்பர் ஜிம்பாப்வே : கடந்த ஏப்ரல் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திரம் படைத்தது.
7. கிவி இங்கிலிஷ் : இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என வென்ற நியூசிலாந்து 21 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது.
8. டெஸ்ட் சாம்பியன்: அதற்கு அடுத்த மாதமே அதே இங்கிலாந்தின் சவுதம்ட்டன் நகரில் நடந்த வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு பரிதாப தோல்வி பரிசளித்த நியூசிலாந்து 21 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
9. லார்ட்ஸ் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியால் மனம் தளராத இந்தியா அதைத் தொடர்ந்து அதே இங்கிலாந்து மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்று இந்தியா அசத்தியது.
10. 50 ஆண்டு கால வெற்றி: அதன்பின் லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து பதிலடி கொடுத்தது ஆனாலும் அதற்கு அசராத இந்தியா லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் மீண்டும் இங்கிலாந்தை திருப்பி அடித்து 51 ஆண்டுகளுக்குப்பின் சரித்திர வெற்றி பெற்றது.
கடைசியாக கடந்த 1971-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா அதன்பின் 2021இல் விராட் கோலி தலைமையில் தோற்கடித்து சாதனை படைத்தது, மேலும் இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1* என இந்தியா தற்போது வரை முன்னிலையில் உள்ளது.
11. வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: கடந்த ஜூலை மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என வென்ற வெஸ்ட் இண்டீஸ் கடந்த 26 ஆண்டுகளுக்கு ஒரு வழியாக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது, அப்படியானால் கடந்த 26 வருடங்களில் எந்த அளவுக்கு ஆஸ்திரேலியா வலுவான அணியாகவும் வெஸ்ட்இண்டீஸ் வலுவற்ற அணியாகவும் இருந்துள்ளது பாருங்கள்.
12. இலங்கை : கடந்த ஜூலை மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியாவிடம் 2 - 1 என இலங்கை இழந்தது, இருப்பினும் அந்தத் தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை 9 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியாவை ஒரு ஒருநாள் போட்டியில் தோற்கடித்தது.
13. இலங்கை: ஷிகர் தவான் தலைமையில் இந்தியா பங்கு பெற்ற அதே சுற்றுப்பயணத்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2 - 1 என இழந்த இந்தியா வரலாற்றில் முதல்முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு டி20 தொடரை இழந்து பரிதாப சாதனை படைத்தது, மறுபுறம் இலங்கை சரித்திரம் படைத்தது.
14. அசத்தல் அயர்லாந்து : கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அயர்லாந்து வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியை வென்று சரித்திரம் எழுதியது.
15. வங்கதேசம்: கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என வங்கதேசம் வென்றது. இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் வெற்றி, முதல் முறையாக அடுத்தடுத்த 2 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி, முதல் முறையாக அடுத்தடுத்த 2 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி, முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி என பல சாதனைகளை கொத்தாக அள்ளியது.
மறுபுறம் மேற்கூறிய அவமானங்களை சந்தித்த ஆஸ்திரேலியா கத்துகுட்டியான வங்கதேசத்திடம் முதல் முறையாக சரணடைந்தது.
16. வங்கதேசம் : அதற்கு அடுத்த வாரமே மீண்டும் தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 2 என வெற்றி பெற்ற வங்க தேசம் வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி என 3 சாதனைகளை செய்தது.
17. நாக் அவுட் இந்தியா: துபாயில் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் நடையை கட்டியது, இதன் வாயிலாக கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஒரு ஐசிசி உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது.
18. ஆஸ்திரேலியா சாம்பியன்: ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான ஐசிசி உலக கோப்பைகளையும் வெற்றி பெற்ற உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை மட்டும் வெல்ல முடியாமல் தவித்து வந்தது.
கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்த 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அந்த தாகத்தை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா தணித்துக் கொண்டது.
19. சிங்கப்பெண்கள்: கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோற்றது ஆனாலும் 3வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணியின் 26 தொடர் ஒருநாள் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
2018 முதல் தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற அணி என்ற உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்தது, அதை இந்தியா முறியடித்தது.
20. செஞ்சூரியன் வெற்றி: நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற புதிய வரலாறு படைத்தது.
21. பரிதாப கோலி: சச்சினுக்கு பின் ரன் மெஷின் என்று கருதப்படும் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த 2 வருடங்களில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிர்த்து வருகிறார்.
இதுவரை 70 சதங்கள் அடித்துள்ள இவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.