2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பல முக்கியமான தருணங்கள் நிகழ்ந்தன குறிப்பாக கிரிக்கெட்டின் உயிர்நாடி எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல சரித்திர வெற்றிகளை ருசித்தது.
Photo Credits : Cricket Australia |
நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற புதிய வரலாற்றை எழுதி உள்ளது.
கனவு அணி:
இது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் ஓவல் ஆகிய சவால் மிகுந்த போட்டிகளில் வெற்றி பெற்று தன்னை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என நிரூபித்துள்ளது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முடிவடைவதை ஒட்டி இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட கனவு டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் என்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அறிவித்துள்ள இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் பற்றி பார்ப்போம்:
1. ரோஹித் சர்மா:
2019 முன்பு வரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என கருதப்பட்ட ரோகித் சர்மா அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து 127 ரன்கள் விளாசிய அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே ஒரு டெஸ்ட் சதத்தை பதிவு செய்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- மொத்தத்தில் இந்த வருடம் 11 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 4 அரை சதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 906 ரன்களை 47.68 என்ற சராசரியில் குவித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ள இந்த கனவு அணியின் தொடக்க வீரராக இடம்படித்துள்ளார்.
2. ரிஷப் பண்ட்:
இந்த ஆண்டு துவக்கத்தில் காபா மைதானத்தில் நடைபெற்ற 4வது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ செய்து வரலாறு படைத்தது, அத்துடன் 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த சரித்திர வெற்றிக்கு 4வது இன்னிங்சில் 89* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வித்திட்டார், அது மட்டுமல்லாமல் அதன் பின் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங்க்கு சவாலான பிட்சில் 91 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
- இந்த வருடத்தில் 12 போட்டிகளில் பங்கேற்ற அவர் 748 ரன்களை 39.36 என்ற சராசரியில் குவித்துள்ளார், இதில் 6 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
- மேலும் 30 கேட்ச்கள், 6 ஸ்டம்பிங் என இந்த வருடம் முழுவதும் கலக்கிய இவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கனவு அணியின் விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.
3. ரவிச்சந்திரன் அஷ்வின் :
இவ்வருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 54 விக்கெட்டுகள் வீழ்த்தி 2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக சாதித்துள்ளார்.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதையும் வென்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2வது வீரர் என்ற சாதனையை ஜாம்பவான் ஜாக் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டார்.
- மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இவர் சிட்னி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹனுமா விஹாரி உடன் இணைந்து இந்தியா தோற்க இருந்த போட்டியை போராடி டிரா செய்ய உதவினார்.
- மொத்தத்தில் இந்த வருடத்தில் 54 விக்கெட்டுகளையும் 355 ரன்களையும் குவித்துள்ள இவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கனவு அணியின் சுழற்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார்.
4. அக்சர் படேல்:
2021 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் பட்டேல் இந்த வருடம் 6 போட்டிகளில் பங்கேற்று 36 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார், இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வருடத்திலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அறிமுக வருடத்தில் சிறப்பாக செயல்படுவது சாதாரண ஒன்றாகும் ஆனால் இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் அளவுக்கு அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டதால் தங்களது கனவு அணியில் தேர்வு செய்துள்ளதாக ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கும் பெருமை அளிக்கிறது என்றே கூறலாம்.
கனவு அணி:
இத்துடன் இந்த அணியில் பேட்டிங்கில் தனி ஒருவனாய் விளையாடிய இங்கிலாந்தின் ஜோ ரூட், பாகிஸ்தானின் பாவத் ஆலம், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோருடன் நியூசிலாந்தின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டராக இருக்கும் கைல் ஜமிசன் இடம் பிடித்துள்ளார், இதில் ஆச்சரியப்படும் வண்ணமாக ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஸ்ஷேன் மட்டுமே இடம் பிடித்துள்ள இந்த அணியின் கேப்டனாக இலங்கையின் திமுத் கருணரத்னே அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2021 கனவு டெஸ்ட் அணி இதோ:
- ரோஹித் சர்மா
- திமுத் கருணாரத்னே (கேப்டன்)
- மார்னஸ் லபுஸ்ஷேன்
- ஜோ ரூட்
- பாவத் ஆலம்
- ரிஷப் பண்ட் (கீப்பர்)
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- அக்சர் படேல்
- ஹசன் அலி
- கைல் ஜமிசன்
- ஷாஹீன் ஷா அப்ரிடி.