ஆங்கில வருடம் 2021 ஆம் ஆண்டு சிலருக்கு சிறப்பாகவும் சிலருக்கு சுமாராகவும் அமைந்திருக்கும், அந்த வகையில் இந்த வருடம் இந்திய கிரிக்கெட் சில வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களையும் சில படுமோசமான தருணங்களையும் சந்தித்தது.
குறிப்பாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் இமயத்தை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது, இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மார்தட்டும் அளவுக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
பொன்னான 2021 :
சரி இந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த 6 பொன்னான தருணங்கள் பற்றி பார்ப்போம்:
1. காபாவில் இந்திய கொடி:
ஆஸ்திரேலியாவில் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் துவங்கிய பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் படுமோசமான தோல்வியை சந்தித்தது, அத்துடன் அந்த சமயத்தில் கேப்டன் விராட் கோலியும் நாடு திரும்பினார்.
அந்த மோசமான தருணத்தில் இந்திய அணியை தலைமை தாங்கிய அஜிங்கிய ரஹானே அடுத்ததாக நடந்த மெல்பர்ன் டெஸ்டில் அபாரமாக சதம் அடித்து வெற்றி பெறச் செய்தார், பின்னர் சிட்னி நகரில் நடந்த 3வது போட்டியில் இந்தியா போராடி டிரா செய்தது.
அந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம் "காபாவுக்கு வா பாப்போம்" என வாய் சவடால் விட்டார், ஏனெனில் அந்த தொடரின் 4வது போட்டி நடைபெற இருந்த காபா மைதானத்தில் 32 வருடங்களாக ஆஸ்திரேலியாவை உலகின் எந்த ஒரு அணியாலும் வீழ்த்த முடியவில்லை.
- அதை தொடர்ந்து நடைபெற்ற 4வது போட்டியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, அஷ்வின் என முக்கிய வீரர்கள் 70% பேர் காயம் அடைந்த காரணத்தால் தமிழகத்தின் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சார்துல் தாகூர் போன்ற அனுபவம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கிய இந்திய யாரும் எதிர்பாரா வண்ணம் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வச் செய்தது.
இதன் வாயிலாக காபா கோட்டையில் ஆஸ்திரேலியாவை 32 வருடங்களுக்கு பின் வீழ்த்திய அணி என்ற பெருமையுடன் வெற்றி கொடியை பறக்க விட்ட இந்தியா 2 - 1 என்ற கணக்கில் 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
2. இங்கிலாந்தில் முன்னிலை:
அதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்க இருந்த இங்கிலாந்தை மழை காப்பாற்றிய வேளையில் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது போட்டி நடந்தது. அதில் கேஎல் ராகுல் அதிரடி சதம் அடிக்க பும்ரா, ஷமி, சிராஜ் போன்ற பவுலர்கள் சிம்ம சொப்பனமாக பந்துவீச்சு இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.
- அந்த போட்டியில் இந்திய பேட்டிங் வீரர்கள் சொதப்ப சமி மற்றும் பும்ரா இணைந்து 89* ரன்கள் குவித்ததும் வெற்றிக்கு முக்கிய வித்திட்டது, இதன் வாயிலாக கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ செய்த இந்திய சரித்திரம் படைத்தது.
78 க்கு ஆல் அவுட் - மெகா வெற்றி:
அதை தொடர்ந்து லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது போட்டியில் வெறும் 78 ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் தோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்த இங்கிலாந்து 1 - 1 என தொடரை சமன் செய்து பழிக்குப் பழி வாங்கியது.
- அடுத்ததாக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தால் 157 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மெகா வெற்றி பெற்ற இந்தியா அந்த தொடரில் 2 - 1* என தற்போது முன்னிலையில் உள்ளது.
- வரும் 2022 ஜூன் மாதம் நடைபெறும் 5வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்று மீண்டும் ஒரு சரித்திர சாதனையை படைக்கும் என நம்பலாம்.
3. ரோஹித் சர்மா எழுச்சி:
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சக்கைப்போடு போட்ட ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவே தடுமாறினார், இருப்பினும் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்ததன் காரணமாக அந்த வருடமே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாட தொடங்கினார்.
- ஆனாலும் "ஆசியாவுக்கு வெளியே ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்" என்ற அமைப்பை அதறகு தொடர்ந்து ஆளாகி வந்தார்.
அந்த வேளையில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் மிகவும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்த அவர் 127 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
- மொத்தத்தில் இந்த வருடத்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கிய அவர் 906 ரன்களை 47.68 என்ற சிறப்பான சராசரியில் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது எழுச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
4. இந்தியாவின் பதிலடி - கலக்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் :
கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இந்தியா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.
வெளிநாடுகளில் அதிரடியாக வெற்றிகளை குவித்து விட்டு சொந்த மண்ணில் இப்படி இருக்கிறதே என இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதே சேப்பாக்கத்தில் நடந்த 2வது போட்டியில் முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மா 161 ரன்கள் விளாசி காப்பாற்றினார், இருப்பினும் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் மிகச் சிறப்பாக பந்து வீசியதால் இந்தியாவின் தோல்வி உறுதியான நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பேட்டிங் செய்து 106 ரன்கள் குவித்து இந்தியாவைக் காப்பாற்றினார்.
- அத்துடன் பந்து வீச்சிலும் 8 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார், அதன்பின் அந்த தொடரில் நடந்த எஞ்சிய போட்டிகளையும் வென்ற இந்தியா 3 - 1 என தொடரை கைப்பற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து அசத்தியது.
- இது மட்டுமல்லாமல் இந்த வருடம் மொத்தம் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஷ்வின் 2021-ஆம் ஆண்டு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
5. செஞ்சூரியனில் வெற்றிக்கொடி:
5. சிங்கபெண்கள்:
கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது, அதில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த போதிலும் 3வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த அந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் இருந்தபோதிலும் ஆஸ்திரேலியாவின் தொடர் உலக சாதனை வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தடுத்து நிறுத்தியது, ஆம் கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியாக ஒரு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தோற்றிருந்தது.
- அதன் பின்னர் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையுடன் வெற்றிநடை போட்டு வந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய சிங்கப்பெண்கள் ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைத்தனர்.