இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியன்று செஞ்சூரியன் நகரில் துவங்கி நடைபெற்றது, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்சில் 327 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக மிகச் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதம் அடித்து 123 ரன்கள் குவித்தார்.
Photo Credits : BCCI |
தென் ஆப்ரிக்கா சார்பில் முதல் நாளில் சொதப்பினாலும் 2வது நாளில் அதிரடியாக பந்துவீசிய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
மிரட்டிய ஷமி:
இதை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள் குறிப்பாக இந்திய பவுலர் முகமது சமி மிகவும் துல்லியமாக பந்துவீசி தென்னாபிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார், இதன் காரணமாக முதல் இன்னிங்சில் அந்த அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, அதிகபட்சமாக தெம்பா பவுமா 52 ரன்கள் எடுத்தார்.
- இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 5 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இந்தியா வெற்றி:
இதை அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தென் ஆப்பிரிக்காவின் சூப்பரான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பி 174 ரன்களுக்கு சுருண்டது ஆனால் முதல் இன்னிங்சில் 130 ரன்கள் எடுத்த முன்னிலை காப்பாற்றியதால் தென்ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இறுதியில் அந்த இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் இந்தியாவின் அதிரடியான துல்லியமான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனதால் அந்த அணி 191 ரன்களுக்கு சுருண்டது.
- இதனால் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் செஞ்சூரியன் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆசிய அணியாக சாதனை படைத்தது, அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0* என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
சத்தமில்லலாமல் ஷமி:
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 123 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 23 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார் ஆனால் இந்த போட்டியின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் முகமது சமி என கூறலாம்.
ஏனெனில் முதல் இன்னிங்சில் இந்திய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கணுக்கால் காயம் காரணமாக ஒரு சில மணி நேரங்களிலேயே விலகினார் ஆனால் அந்த இக்கட்டான நேரத்தில் முகமது சிராஜ் உடன் இணைந்து மிகச் சிறப்பாக பந்து வீசிய முகமது சமி அவர் இல்லாத குறையைப் போக்கினார்.
- முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து அவர் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.
இதன் வாயிலாக சத்தமே இல்லாமல் முகமது சமி 3 சூப்பர் சாதனைகளை படைத்துள்ளார் அது பற்றி பார்ப்போம்:
1. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 44 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த முகமது சமி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சரித்திரத்தை படைத்தார்.
- இப்போட்டிக்கு முன்பு வரை இந்த மைதானத்தில் எந்த ஒரு இந்திய பவுலரும் இங்கு 5 விக்கெட் ஹால் எடுத்ததே கிடையாது, இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
2. இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி செஞ்சூரியன் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார், இவர் 107 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் சாய்த்து இந்த சாதனை படைத்துள்ளார்.
- இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 66 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
3. இதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இவர் இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பெருமையை பெற்றுள்ளார், ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.
இத்துடன் இந்த போட்டியில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளையும் முகமது சமி கடந்தார், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது 100வது டெஸ்ட் விக்கெட்டையும் இதே மைதானத்தில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.