IND vs SA : செஞ்சூரியன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ செய்து புதிய வரலாற்று சாதனை படைத்த இந்தியா

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் செஞ்சூரியன் நகரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான தொடக்கம் கொடுத்தனர்.

Photo Credits : Getty Images


இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் மிகவும் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 17 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட சதமடித்து 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இவரின் சிறப்பான பேட்டிங் காரணமாக 278/3 என நல்ல நிலையில் இருந்த இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போதிலும் தப்பியது என்றே கூறலாம்.

  • தென்ஆப்பிரிக்கா சார்பில் அதிரடியாக பந்து வீசிய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா தடுமாற்றம்:

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தெம்பா பவுமா அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்தார், இந்தியா சார்பில் பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய முகமது சமி 5 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதன் காரணமாக 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய பேட்டர்களில் கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முயன்று அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ரன்களும் ராகுல் 23 ரன்களும் எடுத்தனர், தென் ஆப்ரிக்கா சார்பில் முதல் இன்னிங்சை விட மிகச் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மற்றும் ஜென்சென் தலா 4 விக்கெட்டுகளும் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இந்தியா மிரட்டல் பவுலிங்:

இதை தொடர்ந்து 305 என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சில் விளையாடிய தென்னாப்பிரிக்காவிற்கு ஐடன் மார்க்ரம் 1 ரன்களிலும் பீட்டர்சன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினார், அந்த சரிவை ஈடுகட்ட ஜோடி சிறந்த கேப்டன் டீன் எல்கர் மற்றும் ராசி வன் டர் டுஷன் தடுப்பாட்டம் ஆடத் துவங்கினர்.  அந்த வேளையில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா டுசனை க்ளீன் போல்ட்டாக்கி அதிர விட்டார்.

  • அடுத்து களமிறங்கிய நைட் வாட்ச்மேன் கேசவ் மகாராஜின் ஸ்டம்ப்பையும் 4வது நாளின் கடைசி ஓவரில் போல்டாக்கிய பும்ரா இந்தியாவின் கையை ஓங்க செய்ததால் 4வது நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்கா 94/4 என்ற நிலையில் வெற்றி இரு அணிகளுக்கும் சமமாக இருந்தது.

இதை அடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 211 ரன்கள் தேவை என்ற நிலையில் துவங்கிய கடைசி நாளில் நங்கூரமாக விளையாடி வந்த தென்னாபிரிக்க தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டீன் எல்கர் 77 ரன்களில் பும்ராவிடம் சிக்கினார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 21 ரன்களில் நடையை கட்ட மறுபக்கம் போராடிய பவுமா 35* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் எஞ்சிய பேட்டர்கள் இந்தியாவின் அதிரடி பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அவுட் ஆனதால் 191 ரன்களுக்கு மீண்டும் 

சரித்திர வெற்றி:

இதன் வாயிலாக 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0* என முன்னிலை பெற்றதுடன் தென்ஆப்பிரிக்காவின் சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் செஞ்சூரியன் மைதானத்தில் ஒரு வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆசிய அணி என்ற புதிய வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்தது.

  • கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய அணிகள் இதுநாள் வரை வெற்றி பெற்றதே கிடையாது ஆனால் இந்தியா அந்த வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

அதேபோல் இந்த மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு பின்னர் தென் ஆப்பிரிக்காவை மண்ணைக் கவ்வ செய்த 3வது அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

  • கடைசியாக செஞ்சூரியன் மைதானத்தில் இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு இங்கிலாந்தும் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது, அதன் பின் 7 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியா சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction