ICC Awards 2021 : வருடத்தின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை ரவிச்சந்திரன் அஷ்வின் வெல்வாரா

ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்வது அவர்களுக்கு விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவித்து வருகிறது, ஆங்கில வருடம் 2021 முடிவதை ஒட்டி இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விரைவில் ஐசிசி விருது வழங்க உள்ளது.

Photo Credits : Getty Images


இந்த விருது பட்டியலில் வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர், வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, வருடத்தின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர், வருடத்தின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனை, வருடத்தின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வருடத்தின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை, வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை, கூட்டு நாடுகளில் வருடத்தின் சிறந்த வீரர், கூட்டு நாடுகளில் வருடத்தின் சிறந்த வீராங்கனை, வருடத்தின் சிறந்த ஸ்பிரிட் தருணம் மற்றும் வருடத்தின் சிறந்த அம்பயர் உள்ளிட்ட தனிநபர் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

  • அத்துடன் ஆடவர் மற்றும் மகளிர் என 2 கிரிக்கெட்டுக்கும் தனித்தனியாக வருடத்தின் மிகச்சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் அணி, டி20 அணி போன்ற கனவு அணிகளும் அறிவிக்கப்பட உள்ளன.

ரவிச்சந்திரன் அஷ்வின்:

இந்த நிலையில் இந்த விருது பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கபட்டவர்கள் பெயர்களை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது, இந்த பரிந்துரைக்க பட்டவர்களின் பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்தின் கைல் ஜமிசன், இலங்கையின் திமுத் கருணரத்னே ஆகிய நால்வரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த 2021 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார், இந்த வருடம் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளியதுடன் பேட்டிங்கிலும் அவ்வப்போது கணிசமான ரன்களை குவித்து வருகிறார்.

சூப்பர் 2021:

இந்த 2021 வருடத்தில் அஷ்வின் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 52 விக்கெட்டுகளை 16.23 என்ற மிகச் சிறப்பான சராசரியில் எடுத்து இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார், அத்துடன் 337 ரன்களை 28.08 என்ற சராசரியில் எடுத்துள்ளார், இதில் ஒரு சதம் அடங்கும்.

  • குறிப்பாக ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் 128 பந்துகள் சந்தித்து 29 ரன்கள் குவித்து இந்தியா தோற்க இருந்த போட்டியை போராடி டிரா செய்ய உதவினார்.

பின் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய இவர் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்தத் தொடரின் நாயகன் விருது வென்றார்.

அதன்பின் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறிய வேளையில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார், அதை தொடர்ந்து இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பளிக்க படவில்லை.

இருப்பினும் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் தொடர் நாயகன் விருது வென்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற 2வது வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஜேக் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டார்.

  • இதன் காரணமாக இந்த விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிடைக்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர், அத்துடன் இந்த விருது வெல்பவரின் இறுதிப் பெயர் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Previous Post Next Post

Your Reaction