ஆபத்தான நேரத்தில் உதவிய சிஎஸ்கே - தோனிக்கு நன்றி : உணர்ச்சி பொங்கும் அம்பத்தி ராயுடு

இந்திய அணியில் 2017 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2018 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் அம்பாதி ராயுடு மிகச் சிறப்பாக விளையாடினார், இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருந்த ஐசிசி உலகக் கோப்பைக்கு அவரை இந்திய அணி தேர்வு செய்யும் என பலரும் எதிர்பார்த்தனர்.

Photo Credits : BCCI/IPL


இருப்பினும் அவர் விளையாடிய 4வது இடத்தில் பேட்டிங் செய்பவர் ஓரளவு பந்துவீசுபவராக இருக்க வேண்டும் எனக்கருதிய தேர்வு குழுவினர் அவருக்கு பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கரை தேர்வு செய்தது, மேலும் அந்த உலகக் கோப்பையின் ஸ்டாண்ட் பை லிஸ்டில் முதல் ஆளாக அம்பத்தி ராயுடு உள்ளார் எனவும் தேர்வு குழு தெரிவித்தது

  • இதனால் மனமுடைந்த அம்பத்தி ராயுடு அதை 3டி கண்ணாடிகளை வாங்கியுள்ளேன் என்பது போல் ஜாலியாக வெளிப்படுத்தும் வண்ணம் அது பற்றி டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

துரோகம்:

இதை ஒரு வன்மமாக எடுத்துக்கொண்ட பிசிசிஐ அதன்பின் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஒரு சில போட்டிகளுக்கு பின் காயமடைந்த விஜய் சங்கருக்கு பதிலாக ராயுடுவை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்காமல் அவருக்கு பதில் மயங்க் அகர்வாலை அனுப்பி வைத்து பழி வாங்கியது, இதனால் மேலும் மனமுடைந்த அம்பத்தி ராயுடு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உலககோப்பை முடிந்தபின் அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்தார்.

சென்னையில் மின்னிய ராயுடு:

2018 ஆம் ஆண்டு சென்னைக்காக முதல் முறையாக விளையாட வாய்ப்புக் கிடைத்த ராயுடு அந்த சீசனில் அபாரமாக செயல்பட்டு 3வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல உதவினார், இந்தியாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னரும் அவர் சென்னை அணியில் கடந்த சீசன் வரை கிடைத்த வாய்ப்புகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடினார்.

இந்த நிலையில் தமது கிரிக்கெட் கேரியரில் எம்எஸ் தோனி மிகவும் முக்கிய பங்காற்றி உள்ளதாக ராயுடு தெரிவித்துள்ளார். இதுபற்றி பிடிஐ இணையத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,

  • தோனி பாய் எப்போதுமே என்னுள் இருக்கும் சிறந்த திறமையை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார், எனக்குள் மட்டுமல்ல அவர் அணியில் இருந்த பல வீரர்களிடையே அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார், அதனால் தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக அவர் இருந்தார்.

என ராயுடு கூறியுள்ளார். அவர் கூறுவது போல சென்னையில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரர் ப்ராவோ கூட தமது கிரிக்கெட் கேரியரில் தோனி மிகவும் முக்கிய உதவிகளை செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

2022 சீசன்:

ஐபிஎல் 2022 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. தற்போது 36 வயதாகி விட்ட அவர் வரும் சீசன்களில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

சென்னை அணியில் எனது பங்களிப்பு எனக்கு மிகவும் சிறப்பானது, சென்னைக்காக நான் 2 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன் ஒரு பைனலில் விளையாடி உள்ளேன், குறிப்பாக 2018 சீசன் மிகவும் ஸ்பெஷலானது ஏனெனில் அந்த வருடத்தில் சென்னை மீண்டும் வந்து கோப்பையை வென்றது. சென்னை அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன் என்றாலும் அவர்கள் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை இருப்பினும் மெகா ஏலத்தில் அவர்கள் என்னை மீண்டும் எடுத்து விளையாட வைப்பார்கள் என நம்புகிறேன்

என கூறிய ராயுடு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்று குறைந்தபட்சம் அடுத்த 3 ஐபிஎல் சீசன்களில் விளையாட இருப்பதாகவும் அதற்காக தனது உடல் தகுதிகளை முன்னேற்றி வருவதாகவும் கூறினார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கழட்டி விடப்பட்டது பற்றி அவர் பேசுகையில்,

2019 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது ஆனாலும் அதிலிருந்து நான் மீண்டு வந்து விளையாடியது சென்னை அணிக்கு சமர்ப்பணம் ஏனெனில் அந்த மோசமான தருணத்தில் எனக்கு அவர்கள் ஆதரவளித்து அதிலிருந்து வெளியே வர உதவியதற்காக நான் நன்றி கூறுகிறேன்

என ராயுடு மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction