ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களில் இத்தொடரை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இம்முறை தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாகும். அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 10 மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
Photo Credits : ICC |
அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் களமிறங்குவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை செப்டம்பர் 5ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ரோஹித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் பேட்டிங் துறையில் கில், விராட் கோலி, இஷான் கிசான் ஆகியோருடன் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், தாக்கூர் ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் பும்ரா, ஷமி, சிராஜ் போன்ற வீரர்கள் வேகப்பந்து வீச்சுத் துறையை அலங்கரிகின்றனர்.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தாத சூரியகுமார் யாதவ் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சன், சஹால், ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பிடிக்கவில்லை. மேலும் தமிழகத்திலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற எந்த வீரரும் தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷார்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமத் ஷமி, முகமத் சிராஜ், குல்தீப் யாதவ்