இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய தொடரில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியிலிருந்து ரசிகர்கள் விடுபடுவதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரிலும் 4 - 0 (5) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது.
இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2க்கும் மேற்பட்ட போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. சொல்லப்போனால் 2026 டி20 உலகக் கோப்பை வென்ற பின் இந்திய அணி இதுவரை வெறும் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
இதை அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே மண்ணிலாவது வெற்றி பெற்று தொடர் தோல்விகளை உடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த தோல்விகளுடன் தங்கள் நாட்டுக்கு வந்துள்ள இந்திய அணிக்கு தாங்களும் சமமான சவாலை கொடுத்து வீழ்த்துவோம் என்று ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
"இந்த தொடரில் இரு நாடுகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ஒரு விஷயத்தை நான் உறுதியாக சொல்வேன். ஜிம்பாப்வே அணி தற்போது மிகவும் நிலையான மற்றும் பொழுதுபோக்கை கொடுக்கும் கிரிக்கெட்டை விளையாடுகின்றது. எனவே இந்த தொடர் பொழுதுபோக்காக இருக்கும் என்று நான் சொல்வேன். அதனால் இந்தத் தொடர் நிச்சயம் ஒருதலைபட்சமாக இருக்கும் என்று நான் கருதவில்லை" எனக் கூறினார்.
ஏற்கனவே கத்துக்குட்டியாக கருதப்படும் அயர்லாந்து தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதே போல தற்போது மற்றொரு கத்துக் குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே அணியும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று அதனுடைய கேப்டன் தெரிவித்துள்ளார். அதை சமாளித்து இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
