டி20 கேப்டன் விராட் கோலி பதவி விலக 3 காரணங்கள்

துபாயில் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார், நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

Rohit Sharma | Virat Kohli (Photo By BCCI)

ஏனெனில் உலககோப்பை முடிந்த பின் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் ஆனால் முன்கூட்டியே அவர் இந்த முடிவை அறிவிக்கும் நிலைமையை ஏற்படுத்திய 3 காரணங்கள் பற்றி பார்ப்போம்:


1. பணிச்சுமை :

நேற்றைய தனது அறிவிப்பில் பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுப்பதாக விராட் கோலி தெளிவாக தெரிவித்திருந்தார், கடந்த 8 - 9 வருடங்களாக தொடர்ந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவர் கடந்த 5 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.

இது அவரின் பேட்டிங்கை சமீபகாலமாக பெரிதளவு பாதித்து வருவதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது, குறிப்பாக கடந்த 2019 அக்டோபருக்கு பின் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவித்து வருகிறார்.

எனவே தற்போது 32 வயது நிரம்பிய விராட் கோலி 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு முன் இழந்த தனது பார்மை மீட்டெடுக்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார், இது அவசியமானது ஒன்றும் கூட.

Virat Kohli (Getty Images)


2. ரோஹித் சர்மா அழுத்தம் :

ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை கேப்டனாக ஒருமுறைகூட பெங்களூர் அணிக்காக கோப்பை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது, அதே வேளையில் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை அசால்டாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

  • இந்தியாவுக்காக ரோகித் இதற்கு முன் கடந்த 2018ல் கேப்டன்ஷிப் செய்த ஆசிய கோப்பை மற்றும் நிதியாஸ் கோப்பை ஆகிய 2 கோப்பைகளை வென்று காட்டியுள்ளார், ஒட்டுமொத்தமாக அவர் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்த 19 போட்டிகளில் இந்தியா 15 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

எனவே 78.94 என்ற என்ற வெற்றி சராசரியை கேப்டனாக கொண்டுள்ள ரோகித் சர்மாவை இந்தியா டி20 அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்ற புகைச்சல் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து கொண்டே வந்தது, இந்த அழுத்தமும் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை துறக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது.

3. ஐசிசி உலககோப்பை :

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் இந்தியா சக்கைபோடு போட்டாலும் அவர் தலைமையில் இந்தியா ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது, குறிப்பாக அவர் கேப்டன்ஷிப் செய்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை 2019 உலகக்கோப்பை 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் நாக்அவுட் சுற்று போட்டிகளில் இந்தியா தோற்றது.

எனவே ஒரு உலக கோப்பையை கூட இதுவரை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனமும் விராட் கோலியின் இந்த முடிவுக்கு முக்கிய வித்திட்டது என்றே கூறலாம், இருப்பினும் விராட் கோலி 2023 உலகக் கோப்பை உட்பட ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக தொடர உள்ளார்.

Previous Post Next Post

Your Reaction