இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக அனில் கும்ப்ளே - விவிஎஸ் லக்ஷ்மன்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் துபாயில் நடைபெற இருக்கும் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது.

VVS Laxman | Anil Kumble (File)

இந்த தொடருடன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ரவி சாஸ்திரியும் பிரபல "டெலிகிராப்" நாளிதழில் உறுதிப்படுத்தியுள்ளார். 

அடுத்த கோச் யார் :

இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் வேலைகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது, ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை நியமிக்க அவர்களிடம் சௌரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.

அனில் கும்ப்ளே :

இதில் அனில் கும்ப்ளே ஏற்கனவே இந்தியாவின் பயிற்சியாளராக கடந்த 2016-17 ஆம் ஆண்டு அப்போதைய பிசிசிஐ ஆலோசக கமிட்டியில் இடம்பற்றிருந்த சச்சின் டெண்டுல்கர்,சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட்டார்.

ஆனால் கேப்டன் விராட் கோலி உடனான உறவு சரிவர அமையவில்லை என்ற காரணத்தால் அனில் கும்ப்ளே 2017ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு பின் உடனடியாக பதவி விலகினார்.

தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேவை மீண்டும் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது, அதேசமயம் விவிஎஸ் லக்ஷ்மனிடமும் இந்த பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, இருப்பினும் அனில் கும்ப்ளேவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.

  • பிசிசிஐயை பொருத்தவரை பயிற்சியாளர் பதவியில் ஒரு இந்தியர் இருக்க வேண்டும் என விரும்புகிறது, வெளிநாட்டு பயிற்சியாளர் என்பது 2வது முடிவாகத்தான் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரிடமும் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவமும் இதற்கு முன் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவமும் உள்ளது.

விரைவில் முடிவு :

"அனில் கும்ப்ளே மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறார்களா என்பதை பொருத்தே இது அமையும், பிசிசிஐ பொருத்தவரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒரு வீரராக நல்ல அனுபவமும் பயிற்சியாளராக நல்ல அனுபவமும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதே தகுதியாகும்"

என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பதவிக்கு மற்றொரு இந்திய முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் விண்ணப்பித்துள்ளது பற்றி அவர் பேசுகையில்,

"அவர் இப்பதவிக்கு விண்ணப்பம் செய்வது அவரின் விருப்பமாகும், இருப்பினும் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்படும் அளவுக்கான உயரத்தை அவர் எட்டவில்லை, அவர் துணை பயிற்சியாளராக செயல்பட தகுதியானவர். பயிற்சியாளர் தேர்வு செய்யும் முடிவை பொறுத்து இருந்து பாருங்கள்"

என கூறினார். 2017இல் விராட் கோலியுடன் ஏற்பட்ட முறிவால் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகினார், தற்போது ரவி சாஸ்திரியுடன் 2021 டி20 உலகக் கோப்பையுடன் கோலியும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளார், எனவே அனில் கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது. 

Previous Post Next Post

Your Reaction