எம்எஸ் தோனி கடந்த 2017ஆம் ஆண்டு கேப்டனாக ஓய்வு பெற்றது முதல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்தியாவின் கேப்டனாக விராட் கோலி கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.
![]() |
File Picture |
இந்த காலகட்டங்களில் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு துணை கேப்டனாக நட்சத்திர வீரர் ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார். இந்த வேளையில் பணிச்சுமை காரணமாக வரும் 2021 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.
![]() |
Virat Kohli | Rohit Sharma (BCCI) |
இதை அடுத்து இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் ரோகித் சர்மா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏனெனில் ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே அதிக பட்சமாக 5 கோப்பைகளை கேப்டனாக அவர் வென்றுள்ளார்.
- அத்துடன் இந்தியாவிற்காக இதற்கு முன் துபாயில் நடைபெற்ற 2018-ஆசிய கோப்பையையும் இலங்கையில் நடைபெற்ற நிதியாஸ் முத்தரப்பு டி20 தொடரையும் வென்று கொடுத்து இந்தியாவின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்.
அடுத்த துணை கேப்டன் :
2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய 20 ஓவர் அணியில் ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக தொடர்ந்து விளையாட உள்ளதாக விராட் கோலி கூறியுள்ளார், எனவே இந்தியாவின் அடுத்த துணை கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் பிசிசிஐ அவசரம் காட்டாது என தெரியவருகிறது, ரோகித் சர்மா நியமிக்கப்படும் போது தான் துணை கேப்டன் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியில் 3 பேர் :
இருப்பினும் துணை கேப்டன் பொறுப்புக்கு தற்போதைய நிலைமையில் இந்திய அணியில் இருக்கும் 3 முக்கியமான வீரர்களின் பெயர் முதன்மை பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.
அதில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அவர் துணை கேப்டனாக நியமிக்க பட வாய்ப்புகள் அதிகமாகும்.
இல்லையெனில் மற்றொரு நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் அல்லது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படலாம் என தெரிய வருகிறது.
இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
இந்த பொறுப்புக்கு பண்ட் முதன்மையானவராக உள்ளார், மறுபுறம் ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுலையும் ஒதுக்க முடியாது, அதேசமயம் ஜஸ்பிரித் பும்ரா கருப்பு குதிரையாக உள்ளார்
என கூறியுள்ளார். எனவே இந்தியாவின் வருங்கால டி20 கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய அறிவிப்புக்கு இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.