துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது, இந்த தொடரில் இந்தியாவிற்காக கடைசி முறையாக டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்த விராட் கோலியால் இந்தியாவிற்காக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை அல்லது ஐபிஎல் என எந்த ஒரு வகையான டி20 கிரிக்கெட் கோப்பையையும் கடைசிவரை வெல்ல வேண்டும் என்ற அவரின் கனவு கடைசிவரை நிறைவேறாமல் போனது.
![]() |
File Picture |
இந்த டி20 உலக கோப்பையில் முதல் மற்றும் கடைசியுமாக அவர் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்தார் ஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை இருப்பினும் அவர் தலைமையில் 50 போட்டிகளில் பங்கேற்ற இந்தியா அதில் 32 வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்த தருணத்தில் விராட் கோலி தலைமையில் டி20 கிரிக்கெட்டில் ஆசியாவுக்கு வெளியே இந்தியா பெற்ற 4 மகத்தான வெற்றிகளை பற்றி பார்ப்போம்:
1. தென்ஆப்பிரிக்காவில் வெற்றி (2 - 1) :
கடந்த 2017ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் ஷிகர் தவான்(72 ரன்கள்) மற்றும் புவனேஸ்வர் குமார்(5 விக்கெட்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-வது போட்டியில் தோற்றது.
பின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டியில் சுரேஷ் ரெய்னா (43 ரன்கள்) மற்றும் ஷிகர் தவான் (47 ரன்கள்) ஆகியோரின் அதிரடியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது. புவனேஸ்வர் குமார் 7 விக்கெட்டுகள் உடன் அந்த தொடரின் நாயகன் விருதை வென்றார், ஷிகர் தவான் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 143 ரன்கள் விளாசினார்.
2. இங்கிலாந்தில் வெற்றி (2 - 1) :
கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்து 101 ரன்களும் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் எடுக்க இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பின் நடந்த 2வது போட்டியில் தோற்ற இந்தியா கார்டிப் நகரில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று 2 - 1 எனத் தொடரை வென்றது, 3வது போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து 100 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
3. ஆஸ்திரேலியாவில் வெற்றி (2 - 1):
ஆஸ்திரேலியாவில் கடந்த 2020 டிசம்பரில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2 - 1 என கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது, இருப்பினும் கடைசி போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
![]() |
Virat Kohli (Getty) |
அந்த தொடரில் இந்தியாவிற்கு அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 134 ரன்கள் எடுத்தார், பந்துவீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார், தொடர் நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா அதை நடராஜனுக்கு பரிசளித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
4. நியூஸிலாந்தில் வெற்றி (5 - 0):
கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது, அதில் முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் விராட் கோலி தலைமையிலான இந்தியா வெற்றி பெறவே 5வது போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் செய்தார்.
அந்த போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற வரலாற்றிலேயே முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு கிரிக்கெட் தொடரை 5 - 0 என வென்ற முதல் அணி என்ற உலக சாதனையுடன் இந்தியா கோப்பையை வென்றது, இந்த தொடரில் இந்தியா பெற்ற 5 வெற்றிகளில் 2 வெற்றிகள் சூப்பர் ஓவர் வாயிலாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த தொடரில் 224 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தொடர் நாயகன் விருது வென்றார், இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 8 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த வெற்றிகளின் வாயிலாக இந்த 4 நாடுகளில் டி20 தொடரை வென்ற முதல் மற்றும் ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.