இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து வருகின்ற 2021 20 ஓவர் உலகக் கோப்பையுடன் விலகுவதாக விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தார், இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளார்.
![]() |
Sachin Tendulkar | Virat Kohli (Getty) |
இருப்பினும் தனது கடைசி ஐபிஎல் போட்டி வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார், இதனால் பெங்களூர் அணி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் இந்த அடுத்தடுத்த டி20 கிரிக்கெட் பற்றிய அறிவிப்புகளின் வாயிலாக இனிவரும் காலங்களில் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பல வீரர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று டி20 கிரிக்கெட்டில் இறுதிவரை விளையாடுவார்கள் ஆனால் இவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கும் எண்ணத்திலேயே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறுகிறார். இதுபற்றி தனது யூடியூப் வீடியோவில் அவர் பேசுகையில்,
அவர் இந்திய அணியின் டி20 கேப்டன் மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார், இது நீண்ட கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை காட்டுகிறது. அவர் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட விரும்புகிறார், அதேசமயம் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் உள்ளது.
என கூறிய அவர் சச்சினின் சதங்கள் சாதனை பற்றி பேசுகையில்,
43 சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை உடைக்க நல்ல வாய்ப்பு அவருக்கு உள்ளது ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 27 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் ஆனால் சச்சின் 200 போட்டிகளில் 51 சதங்கள் அடித்துள்ளார். அனேகமாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி சச்சினின் 50 சதங்கள் சாதனையை முறியடிக்க விரும்புகிறார் என நான் நினைக்கிறேன், மேலும் அவர் ஒரு ஜாம்பவான் பேட்ஸ்மேனாக உருவாக நினைத்து அதை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்
என கூறினார். சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் ரன் மெஷின் என கருதப்படும் விராட் கோலி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு சதம் அடித்தார், அதன்பின் 2 வருடங்களாக மோசமான பாரம் காரணமாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
![]() |
VIRAT KOHLI (Getty Images) |
இந்தியாவிற்காக 3 விதமான கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என 4 அணிகளுக்கு கேப்டனாக இருப்பதால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என அவர் கருதியதாலேயே பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே நேரடியாகவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2022க்கு பின் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு :
இந்தியாவின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது நல்ல முடிவு எனவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் க்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் அவர் தொடர்ந்து இந்த 2 கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படலாம் எனவும் பிராட் ஹோக் தெரிவித்தார். இருப்பினும் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு வித்தியாசமான கேப்டன் தேவைப்படுகிறது எனவும் அவர் கூறினார். மேலும்
2022 டி20 உலகக்கோப்பைக்கு பின் அவர் அதிக டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று எனக்கு தோனவில்லை, அடுத்த வருடத்திற்கு பின் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவார் என நம்புகிறேன் ஏனெனில் அவருக்கும் குடும்பம் உள்ளது, அத்துடன் தனிமை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பது வீரர்களுக்கு பெரிய மன வேதனையை கொடுத்து வருகிறது, இது போன்ற விஷயங்களால் அவர் அடுத்த சில ஆண்டுகளுக்கு பின் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.
என கூறினார். இருப்பினும் இந்தியாவிற்காக தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.